பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதன் எத்தனை ஆயிரம் மனக்கோட்டைகளைக் கட்டினாலும் தன்னுடைய மரணம் கௌரவமாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனின் இறுதி விருப்பமாக இருக்கும். உலகில் பிறந்து வாழ்ந்து இறக்கும் எல்லா மனிதர்களுக்கும் இறுதி மரியாதையை பெற்றுத் தருவது இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்கள் தான்.
உடலில் இருந்து உயிர் பிரிந்தால் அந்த உடலை அடக்கமோ தகனமோ செய்யும் வரையிலான இறுதிச் சடங்குகள் செய்யும் நடைமுறை உலகம் முழுவதுமே இருக்கிறது. அந்தந்த பகுதி கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்பாடு இவற்றைப் பொறுத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் மட்டுமே தான் வேறுபடும்.
உயிருடன் இருக்கும் வரை தான் பணம், பட்டம், பதவி, பேர் புகழ், செல்வாக்கு எல்லாமே. இறந்த பிறகு எல்லோருக்கும் ஒரே பெயர் தான்…பிணம்.
என்ன தான் ஒட்டி உறவாடிய சொந்தங்களாக இருந்தாலும் உயிர் போன பிறகு பெற்ற பிள்ளையாக இருந்தாலும் தொட்டு தூக்கி எல்லாம் செய்வதற்கு ஒரு வித அச்சமும் தயக்கமும் ஒரு அருவருப்பும் மனத்தடையும் வந்து விடுகிறது.
இறந்த பிறகு அந்த உடலைச் சுத்தப்படுத்தி, சவரம் செய்து, குளிப்பாட்டி அதற்கு அலங்காரங்கள் செய்து, உடை அணிவித்து, மாலை மரியாதையோடு கிடத்துவதற்கு இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்களைத் தவிர யாரும் முன் வருவதில்லை.
ஏனெனில் அதற்கான மனோதிடம் நம்மிடம் இருப்பதில்லை. அதோடு நீண்ட நாட்கள் படுக்கையில் கிடந்தவர்கள், நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள், தொற்று நோய்களால் இறந்தவர்கள், விபத்தில் உருக்குலைந்த உடல்கள், துர்நாற்றம், புண்கள், அதிலிருந்து வடியும் நீர், சீழ் என்று எந்த அருவெருப்பும் பார்க்காமல், ஆண் பெண் பேதமில்லாமல் அந்த உடலைத் தொட்டு தூக்கி அத்தனை சடங்குகளையும் செய்பவர்கள் இவர்கள் தான்.
பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், மயான தொழிலாளர்கள், பிணவறை ஊழியர்கள் இவர்களைப் பற்றிக்கூட வரலாற்றின் பக்கங்களில் சில பதிவுசெய்துள்ளன. ஆனால் இறப்பு நிகழ்ந்தால் மட்டுமே தேடப்படும் இந்த தொழிலாளர்களைப் பற்றி யாருமே பேசுவதில்லை.
ஒருவர் இறந்து விட்டார் என்று தெரிந்தவுடன் உற்றார் உறவினர்களுக்கு தகவல் சொல்லுவதற்கு முன்பே இவர்களைத் தான் தேடுவார்கள். இறந்தவர்களின் உடல் எந்த நிலையில் இருந்தாலும் சுத்தம் செய்து அலங்கரித்து தேவையான கட்டுகள் இட்டு இறுதி அஞ்சலிக்கு பார்வையாக வைப்பதோடு மட்டும் இவர்களின் பணி முடிவடைந்து விடுவதில்லை.
தேங்காய் உடைத்தல், எண்ணெய் சீயக்காய் வைத்தல், தண்ணீர் கொண்டு வருதல் குளிப்பாட்டுதல், கோடி போடுதல் நெய்ப் பந்தம் பிடித்தல், பாடை மாற்றுதல், கொள்ளி வைத்தல் அல்லது குழிக்குள் இறக்குதல் என்று அனைத்து விஷயங்களையும் முன் நின்று செய்வது இவர்கள்தான்..
இன்றைய நாகரிக உலகில் நம்முடைய பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்வது பற்றி நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.என்னதான் சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் நன்கு தெரிந்தவர்களாக இருந்தாலும் கூட தன்னுடைய குடும்பத்தில் ஒரு இறப்பு நிகழும் போது நமக்கு கையும் ஓடாது காலும் ஓடாது.. அப்போது நமது குடும்பத்தில் நீத்தாருக்கு எந்தக் குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் நம்முடைய ஸ்தானத்திலிருந்து எடுத்துக்கட்டி செய்பவர்கள் அவர்கள்தான்.
அடக்கத்திற்கு பிறகும் கூட பால் தெளித்தல், எரித்த இடத்தில் அஸ்தி எடுப்பது முதல் ஈமச்சடங்கு மற்றும் பதினாறாம் நாள் காரியங்கள் செய்வது வரை எல்லாவற்றிலும் இவர்களுக்கு பங்கு உண்டு.
நமது சமூகக் கட்டமைப்பில் துப்புரவு தொழில், சவரத்தொழில், சலவைத் தொழில், மருத்துவ தொழில் இவற்றில் ஈடுபட்ட சமூகத்தினர் யாரும் செய்ய முன்வராத போது தாமாக முன்வந்து இறுதிச் சடங்கு சம்பிரதாயங்களை செய்து வந்தனர். அவர்கள் வழியில் வந்த வாரிசுகள் விரும்பியோ விரும்பாமலோ இந்த தொழிலை செய்யப் பணிக்கப் பட்டார்கள்.
என்ன தான் இவர்கள் செய்வது உன்னதமான பணியாக இருந்தாலும் சமூகம் இவர்களை தீட்டாகத் தான் ஒதுக்கி வைத்திருக்கிறது. இவர்களுக்கு கிடைக்கும் கூலியும் சொற்பமானதாகவே இருக்கிறது.
துக்க வீட்டில் மற்றவர்கள் இழிவாக கருதக்கூடிய சடங்குகளை செய்பவர்கள் என்பதால் மற்ற சுப காரியங்கள் கோவில் விசேஷங்களில் இவர்களை தீட்டாகவே இந்த சமூகம் ஒதுக்கி வைக்கிறது. இதுபோன்ற தொழிலை செய்பவர்கள் என்றால் அவர்களுக்கு பெண் கொடுப்பதற்கு கூட தயங்கும் நிலை தான் இருக்கிறது.. இறப்பு இல்லாத நாட்களில் வேறு வேலைகளுக்கு சென்று பிழைப்பதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை இவர்கள் சந்திக்கின்றனர்.
எனினும் இறுதிச் சடங்குகளை செய்யும் தொழிலாளர்கள் இன்றைக்கும் சமூகத்தால் விலக்கி வைக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்களாகவே இருக்கிறார்கள்.
அடக்கம் முடிந்தவுடன் இவர்களை யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. அதை விடக் கொடுமை என்னவென்றால் அவர்களுக்கு கொடுக்கும் சொற்பக்கூலிக்கும் பேரம் பேசுவது தான்.
நாடாளும் மன்னனாக இருந்தாலும் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு மரியாதை இருந்திருந்தாலும் இறந்த பிறகு அவர்களுக்கு இறுதி மரியாதை செய்வது சில நூறு ரூபாய் கூலிக்கு போராடும் இந்த இறுதிச் சடங்கு செய்யும் தொழிலாளர்கள் தான்.
எத்தனையோ பேர் தன் மரணத்திற்கும் பிறகும் கூட யோசித்து ஈமச்சடங்கு , காரியம் செய்யவும் கல்லறையோ, சமாதியோ கட்டுவதற்கும் கூட முன் கூட்டியே பணம் எடுத்து வைக்கிறார்கள். இனி அவ்வாறு செய்யும்போது நமக்கான இறுதி மரியாதையைப் பெற்றுத் தரும் ஈமச்சடங்கு தொழிலாளர்களையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
ஒருவன் தன் வாழ்நாளில் எத்தனை கோடி சொத்துக்களை சேர்த்து வைத்து எல்லோருக்கும் வாரி வழங்கியிருந்தாலும், எத்தனையோ தான தர்மங்கள், புண்ணியங்கள் செய்திருந்தாலும் அத்துணைப் புண்ணியத்திற்கான மரியாதையும் இறுதிச் சடங்குகளை செய்யும் இந்த எளிய தொழிலாளர்களுக்கு தான் செல்கிறது.
ஆனாலும் நம் சமூக அமைப்பில் அவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அரசாங்கம் இவர்களுக்கென்று ஏதாவது சலுகைகள் வழங்குகிறதா என்று தெரியவில்லை… அப்படி இல்லாதிருந்தால் இவர்களும் வாக்களிக்கும் குடிமகன் தான் என்பதை கருத்தில் கொண்டு இவர்களுக்கான சலுகைகள் வழங்கினால் நன்றாக இருக்கும்.நாமும் சகமனிதனாக
இவர்களையும் மனிதர்களாக மதிக்க பழகுவோம்..!
# ஈரநெஞ்சம் மகேந்திரன் #