Close
ஜனவரி 2, 2025 2:44 மணி

தான்சானியா நாட்டு வேளாண் விஞ்ஞானிகளுக்கு எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் செம்மை நெல் சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி பெற வந்த தான்சானியா நாட்டு வேளாண் விஞ்ஞானிகள்

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்  சார்பில் ஏற்பாடு செய்திருந்த தான்சானியா விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியா வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஐந்து வேளாண் விஞ்ஞானிகள் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் புதுக்கோட்டைக்கு வந்துள்ளார்கள்.

அவர்கள் ஒற்றை நாற்று நடவு என்று சொல்லக்கூடிய செம்மை நெல் சாகுபடி முறை பற்றி பயிற்சி பெறுவதற்காகவும் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கிராம அறிவு மையம், வள மையம் மற்றும் பயிர் மருத்துவ முகாம் ஆகியவைகள் பற்றி தெரிந்து கொள்ளவும், பயிற்சி பெறவும் புதுக்கோட்டைக்கு வருகை புரிந்துள்ளார்கள் என்றார் அவர்.

தான்சானியா விவசாய ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி முனைவர் பில்லோரோ புதுக்கோட்டை மாவட்டத்தில் பார்த்த விவரங்களையும் பெற்ற பயிற்சிகள் பற்றியும்  அனுபவங்கள் குறித்தும் பேசியதாவது:

புதுக்கோட்டை
பயிற்சி அனுபவத்தை பகிர்ந்து கொண்ட தான்சானியா நாட்டு வேளாண் விஞ்ஞானி

இந்தியாவின் முக்கிய மாநிலமாகத்திகழும்   தமிழ்நாட்டில் உள்ள  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் மிக அன்பாக பழகுகி ன்றனர். இங்குள்ள உணவு மிகவும் பிடித்திருக்கின்றது.

இங்கு நாங்கள் ஒற்றை நாற்று நடவு முறை, அதற்கான பாய் நாற்றங்கால் தயாரித்தல், நடவு முறை, கோணோவீடர் மூலம் களை எடுத்தல், இயந்திர நடவு, காய்ச்சலும் பாய்ச்சலும் முறையிலான நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவை பற்றி தெளிவாக தெரிந்து கொண்டோம்.

மேலும் எம். எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கிராம அறிவு மைய செயல் பாடுகள், அறிவு மையத்தில் எவ்வாறு பல்வேறு தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விவரங்கள் வழங்கப்படுகின்றது.

பயிர் மருத்துவ முகாம் எவ்வாறு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த மற்றும் குறைபாடுகளை போக்க உதவுகின்றது, புதிய வகை நுண்ணோக்கி மூலம் கண்ணுக்குத் தெரியாத பூச்சி நோய்களை கண்டறிதல் போன்றவைகளை செயல் விளக்கமாக விவசாயிகளின் உதவியுடன் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் களத்தில் செயல் விளக்க பயிற்சி அளித்தார்கள்.

இங்கு கற்றுக்கொண்ட வைகளை எங்கள் நாட்டில் செயல்படுத்த உள்ளோம் என்றார் அவர்.

எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் ஜி.சுதாகர், பி.செந்தில்குமார், ஏ.கோபால், ஜி.முருகன், ஆர்.வினோத்கண்ணா, பி.சிலம்பரசன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூச்சிகள் துறை பேராசிரியர் வி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.

தான்சானியா விவசாய ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் பிராகிசா மிராஜ் ,பாபியாலா லாங்கா, காசனேனே,டேனியல் டாசன் ஆகியோர்கள் தாங்கள் களத்தில் பார்த்த அனுபவங் களை பகிர்ந்து கொண்டார்கள்.

முன்னோடி விவசாயிகள் ச.வே.காமராசு, ஜி.எஸ்.தனபதி, அ.கோபாலகிருஷ்ணன், எம்.முத்துலட்சுமி ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட விவசாய அனுபவங்களை  பகிர்ந்தனர்.

அரிமளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மேகலா முத்து, குழந்தைகள் நல குழு தலைவர் கே.சதாசிவம், நேரு யுககேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் கே.ஜோயல் பிரபாகர், வீதி இலக்கிய அமைப்பு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.கீதா ஆகியோர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்கள்.

இதில் விவசாயிகள், பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன பிரதிநிதிகள், உள்ளிட்ட 100  -க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

தான்சானியா நாட்டின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பங்கேற்பாளர் களின் கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் பதில் அளித்தார்கள்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாவை சந்தித்த தான்சானியா நாட்டு வேளாண் விஞ்ஞானிகள்

தான்சனியா நாட்டு விஞ்ஞானிகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யாவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தனர்.  மாவட்ட ஆட்சியர்  புதுக்கோட்டையில் விவசாய மற்றும் உழவர் நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை விளக்கி கூறினார்.

அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 60% மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேளாண்மையை தொழிலாக கொண்டுள்ளனர். நிலமில்லா விவசாயக் கூலிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

விவசாயமில்லா காலங்களில் இத்திட்டத்தில் வேளாண் தொழிலாளர்கள் சிறந்த பயன் அடைகின்றனர். விவசாய தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரிவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்துகின்றது.

இலவச காலை, மதிய உணவு, விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்குவதன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கு வருகைபுரிவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போது பண்ணை நிர்வாகத்தில் வயதானவர்கள் மட்டுமே ஈடுபடுவதால், பண்ணை நிர்வாகத்தில் இயந்திரமாதல் அவசியமாகின்றது.

உதராணமாக இராஜராஜன் 1000 எனப்படும் செம்மை நெல் சாகுபடி நாற்றுநடும் இயந்திரத்தின் பயன்பாடு போன்றவை பண்ணை இயந்திரமாவதற்கான உதாரணமாகும் என்றார் ஆட்சியர்.

இதைத்தொடர்ந்து,  மாவட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில்,

புதுக்கோட்டை
வேளாண் துறை அலுவலத்தில் நடைபெற்ற தான்சானியா வேளாண் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்

வேளாண்மை துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பயிர் காப்பீடு பற்றி வேளாண் இணை இயக்குனர் மா.பெரியசாமி, உதவி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமுர்த்தி வேளாண்மை அலுவலர் எஸ்.முகமது ரபி, துணை இயக்குனர் கே.பாண்டி ஆகியோர் விளக்கி கூறினார்கள்.

எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கள ஒருங்கிணைப் பாளர் டி.விமலா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் எம்.முத்துக்குமார் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top