ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கைவிடக் கோரி அனைத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் புதுக்கோட்டையில் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டிற்கு தொமுச மாவட்டத் தலைவர் அ.ரெத்தினம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தொமுச மாவட்டச் செயலாளர் கி.கணபதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், தலைவர் க.முகமதலிஜின்னா, தொமுச பேரவை செயற்குழு உறுப்பினர் எம்.வேலுச்சாமி, ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ப.ஜீவானந்தம், தலைவர் உ.அரசப்பன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் எம்.முத்துராஜா, தலைவர் எஸ்.சிவராஜ் உள்ளிட்டோர் பேசினர்.
ஒன்றிய அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டத்திருத்தத் தொகுப்பை கைவிட வேண்டும்.
நூறுநாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாகவும், கூலியை ரூ.600-ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.