Close
செப்டம்பர் 20, 2024 3:54 காலை

சென்னை மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை

மாநகராட்சியைக் கண்டித்து தண்டையார் பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் தண்டையார்பேட்டை யில் செவ்வாய்க் கிழமை  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து வடசென்னை (வடகிழக்கு) மாவட்ட அ.தி.மு.க.சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் தண்டையார்பேட்டையில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தண்டையார்பேட்டை மண்டலகுழு அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் பேசியது,

சென்னை மாநகராட்சியில் அனைத்து துறைகளிலும், அனைத்து நிலைகளிலும் ஊழல் முறைகேடுகள் அதிகரித்து வருகிறது.  ஒப்பந்த ஊழியர்கள் நியமனத்தில் கூட ஊழல் நடைபெறுகிறது.

சாலையில் உள்ள மண், இடிபாடுகளை அகற்றும் 8 இயந்திரங் களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அதிமுக சார்பில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்து 13 ஆம்புலன்ஸ் வாகனங்களும் பழுதடைந்து செயல்பாடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆம்புலன்ஸ் வாகனங்களை பராமரிக்கப்பட்டு வருவதாக செலவினங்களுக்கு அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.  இது போன்ற பல்வேறு முறைகேடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தொடர் போராட்டங்களை அதிமுக முன்னெடுக்கும் என்றார் ராஜேஷ்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கணேசன், சீனிவாச பாலாஜி, நித்தியானந்தம், பாஸ்கர்,சேவியர், மதுரை வீரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top