புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியர் மெர்சி ரம்யா (12.08.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது,ஆட்சியர் கூறியதாவது:கிராமப்புறங் களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிராம புறங்களில் போக்குவரத்து வசதிக்காக சாலை வசதிகளை மேம்படுத்தும் வகையில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் மூலம் புதிய சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருமயம் ஊராட்சியில் ஓலைக்குடிப்பட்டி செல்லும் 1 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் மூலம் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கவும், சாலையின் ஓரங்களில் மேடு பள்ளங்களை சீரமைக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து திருமயத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி ஆய்வு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் குறித்தும், தரம் குறித்தும், விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் திருமயம் கோட்டை தெருவில் செயல்பட்டுவரும் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதியினை பார்வையிட்டு, விடுதியில் செயல்பட்டுவரும் நூலகம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் மாணவிகளிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் குறித்தும், உணவு அட்டவணையின்படி உணவு வகைகள் மாணவிகளுக்கு வழங்கப்படுவது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
எனவே தமிழக அரசு மாணவ, மாணவிகளின் கல்வியில் அக்கரைகொண்டு உங்களுக்காக செயல்படுத்தப்பட்டுவரும் விடுதிகளை முறையாக பயன் படுத்திக்கொண்டு, கல்வியில் முன்னேற வேண்டும் என்றார் ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் நளினி, வட்டாட்சியர் திரு.புவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.