Close
நவம்பர் 10, 2024 6:11 காலை

தீரர் சத்தியமூர்த்தி பிறந்த நாள்.. உருவச்சிலைக்கு காங்கிரஸார் மரியாதை

புதுக்கோட்டை

சுதந்திர போராட்ட வீரர் சத்தியமூர்த்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த காங்கிரஸார்

சுதந்திர போராட்ட வீரருமான திருமயத்தை சேர்ந்த தீரர் சத்தியமூா்த்தியின் பிறந்த நாள் விழா நேற்று(19.8.2023) கொண்டாடப்பட்டது.

இதையொட்டி புதுக்கோட்டை நீதிமன்ற  வளாகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தியின் உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்தநிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.

முன்னாள் நகர்மன்ற தலைவருமான துரை. திவியநாதன் மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பென்னட் அந்தோணி ராஜ், மாநில சிறுபான்மை பிரிவு துணை தலைவர் இப்றாஹிம் பாபு, புதுக்கோட்டை வட்டார தலைவர் சூர்யா பழனியப்பன்  நகர தலைவர் பாருக், மதன் கண்ணன், நகர் மன்ற உறுப்பினப் வேங்கை அருணாசலம்,  செம்பை மணி, எம். ஏ. எம். தீன், குட்லக் முகமது மீரா, அப்துல்லா, வீரமணி துரைக்கண்ணன், சகாயம், கௌரி, சித்ராக்கண்ணு,  எஸ்ஏ. காதர், மக்கள் கோபால், சிவா, முத்து விஜய,ன் அகமது,  இதில் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

திருமயத்தில் பிறந்த தீரர் சத்தியமூர்த்தி..

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் 1887 -ஆம் ஆண்டு ஆகஸ்டு 19-ஆம் தேதி பிறந்தவர். அவருக்கு எட்டு சகோதரர்கள். அவரது இளம் வயதிலேயே அவரது தந்தை மரணம் அடைந்ததால் தனது தாய் மற்றும் சகோதரர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் இவரிடம் வந்தது. ஆனால் கடும் உழைப்புக்கு மத்தியில் 1906-ஆம் ஆண்டு, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் வரலாற்றுத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

இதைத்தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். இதைத்தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரான ஸ்ரீ.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்காரின் கீழ் சட்டப் பயிற்சி மேற்கொண்டார். சத்திய மூர்த்தி கல்லூரியில் படித்த நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பு ஏற்பட்டது. இதுவே பின் நாட்களில் சத்தியமூர்த்தியை அரசியலில் பக்கம் திருப்பியது.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு தமிழக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக சேர்ந்த பின் தன் கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்தார். இதைத்தொடர்ந்து காங்கிரபிறகு காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தம் மற்றும் ரவுலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதாட, இங்கிலாந்து அனுப்பப்பட்டார்.

இதற்கிடையில் 1923-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராகவும் பொறுப்பேற்றார். சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு போன்றவர்கள் தொடங்கிய ‘சுயராஜ்ஜியக் கட்சி’யில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்திய பாராளுமன்ற ஜனநாயகம் அமைவதற்கு உறுதுணையாக இருந்தார். 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வென்றவர் சென்னை மாகாண கவுன்சிலரானார்.

1939-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி தலைவராக பணியாற்றியபொழுது, சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க, பிரிட்டிஷ் அரசுடன் போராடி பூண்டி நீர்த்தேக்கத்திற்கான ஒப்புதல் பெற்று, பணிகள் உடனே தொடரவும் தீவிரம் காட்டினார்.

சுதேசி இயக்கத்தில் தீவிர செயல்பட்டதால் அவர், 1940ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 1942ம் ஆண்டு நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது கைதானார். சத்திய மூர்த்தி, 1954 முதல் 1963 வரை தமிழ் நாட்டின் தலைசிறந்த முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு ஒரு சிறந்த அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்தவர்.

தன்னால் கட்சிக்கு அழைத்து வரப்பட்ட காமராசரைத் தலைவராக்கினார். அதுமட்டும் இல்லாமல் காமராஜரின் தலைமையின்கீழ் செயலாளராகப் பணியாற்றவும் செய்தார். இது இன்றைய அரசியல் தலைவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய குணம் ஆகும்.

அவர் சென்னை நகர மேயராக இருந்தபோதுதான் இன்றைய பூண்டி நீர்த்தேக்கத்தை, ஆங்கில அரசுடன் வாதாடி அமைத்தார். ஆனால், அந்தப் பணிகள் நிறைவடைவதற்குள் அவர் காலமானதால், பின்னர் காமராசர் அந்த நீர்த்தேக்கத்திற்கு சத்தியமூர்த்தி நீர்த் தேக்கம் என்றே பெயரிட்டார்.

1936 ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தேர்ந்தெ டுக்கப்பட்ட சத்தியமூர்த்தி, காமராஜரை பொதுச் செயலா ளராகவும் நியமித்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற போது காமராஜர், முதலில் சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, சுதந்திரக்கொடியை ஏற்றி, தன்னுடைய குருவின் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தினார்.

அதேபோல் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற காமராஜர், சத்தியமூர்த்தி வீட்டுக்கு சென்று, அவருடைய புகைப்படத் திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு ஆற்றிய தொண்டை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமையகத்திற்கு ‘சத்தியமூர்த்தி பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1942 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு நாக்பூரிலுள்ள அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், முதுகு தண்டு காயத்தினால் அவதிப்பட்ட சத்தியமூர்த்தி, 1943-ஆம் ஆண்டு மார்ச் 28-ஆம் தேதி, சென்னை மருத்துவமனையில் தன்னுடைய 55 -ஆவது வயதில் காலமானார். சுதந்திர போராட்ட வீரரான சத்திய மூர்த்தியின் பிறந்த நாளில் அவரது அரசியல் வாழ்க்கையும் மக்கள் பணிகளும் நினைவு கூரத்தக்கது

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top