Close
நவம்பர் 25, 2024 12:03 காலை

மீண்டும் மஞ்சப்பை… கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பிரசாரம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சந்தையில் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட கேகேசி கல்லூரி வரலாற்றுத்துறை மாணவிகள்

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாணவிகள் பொதுமக்களிடம் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

கல்லூரி முதல்வர் ஜெ.  சுகந்தி வழிகாட்டுதலின்படி, கல்லூரி வரலாற்றுத்துறைத்தலைவர் மு. காயத்ரிதேவி தலைமையில்  பேராசிரியர்கள் ஜோதி, தனலட்சுமி மற்றும் மாணவிகள் 75 பேருடன்  புதுக்கோட்டை வாரச்சந்தை மற்றும் மீன் சந்தைப்பகுதியில் நெகிழி பைகளைத்தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

இது குறித்து மு.காயத்ரிதேவி கூறியதாவது: மீண்டும் மஞ்சப்பையா பயன்படுத்துவோம், நெகிழி பைகளைத் தவிர்ப்போம், இயற்கையைக் காப்போம் என்ற முழக்கத்துடன் கல்லூரி சார்பில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.

நெகிழிப் பைகளுக்கு மாற்று பொருளை பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக “மீண்டும் மஞ்சப்பை” இயக்கத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.

ஒரு காலத்தில், திருமண நிகழ்வுகளில் தேங்காய், பழம் ஆகியவற்றை மஞ்சள் பையில்தான் போட்டுக் கொடுப்பார்கள், அது வீடுகளை அடைந்ததும், கடைகளுக்குச் செல்வதற்கும் இதர பணிகளுக்கும் பயன்படுவது வாடிக்கை.

சந்தைகளிலும், பெரும் பணப்பரிமாற்றங்களிலும் கூட மஞ்சள் பைகள்தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. திருமண தாம்பூலப் பை உள்பட எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் எல்லா இடங்களிலும் மஞ்சள் பை நீக்கமர நிறைந்திருந்தது.

நெகிழிப் பைகள் அறிமுகமாகாத காலத்தில் அரிசியோ, பருப்போ, காகிதமோ, பணமோ ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல உதவியது மஞ்சப்பைகள்தான்.

காலப்போக்கில் நெகிழிப் பைகளின் பயன்பாடு அதிகரித்தது. அதன்பிறகு மஞ்சப்பை என கேலிப்பொருளாக சிறுமைப் படுத்தப்பட்டு துணிப்பைகள் ஒதுக்கி வைக்கப்பட்டன.

குறைந்த செலவு என வணிக நிறுவனங்களும், கையாளு வதில் எளிமை என மக்களும்  நெகிழிப் பைகள் பக்கம் சாய்ந்ததால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை கொண்ட நெகிழி கழிவு  உலகிற்கே அச்சுறுத்தலாக மாறிப்போனது. இதை எப்படி அழிப்பது என அனைவரும் திகைத்து நிற்கின்றனர்.

மண், நீர், காற்று, தாவரம், விலங்கு, மனிதன் என எதனையும் விட்டு வைக்காமல், முடிந்த அளவு தீமை தந்து வருகிறது பிளாஸ்டிக். எனவே, நெகிழி பயன்பாட்டை குறைக்க வேண்டுமென சூழலியல் ஆர்வர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் சூழலில் அதற்கான முயற்சிகள் உலகம் முழுவதும் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை வாரச்சந்தை மற்றும் மீன் சந்தை ஆகிய பகுதிகளில் மஞ்சப்பை குறித்து பிரசாரம் செய்து விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்தினர். இதன் மூலம் பொதுமக்கள் 400 பேருக்கு மஞ்சப்பை இலவசமாக வழங்கப்பட்டது என்றார்  வரலாற்றுத்துறைத்தலைவர் மு. காயத்ரிதேவி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top