ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பான தீபாவளிகுறித்து விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிப்பது எப்படி என்ற துண்டு பிரசுரத்தை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி வழங்கினார்.
தீபாவளிக்காக பட்டாசு வெடிக்கும் மாணவர்கள் பட்டாசு களை பெரியவர்கள் துணையுடன் வெடிக்க வேண்டும் என்றும் வாளியில் தண்ணீரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் பட்டாசுகளை வெடிக்கும் போது பச்சிளம் குழந்தைகளை, முதியவர்களை,உடல் நலம் பாதிக்கப் பட்டவர்களை இடையூறு செய்யாதவாறு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை கைகளில் வைத்துக்கொண்டு வெடிக்கக்கூடாது.
மின் கம்பங்கள், மின் மாற்றிகள் இருக்கும் இடங்கள் மற்றும் குடிசைப்பகுதிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.
பறவைகளை, விலங்குகளை அச்சப்படுத்தும் வகையில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுவெடிப்பது மகிழ்ச்சிக்காகத்தான் என்பதை உணர வேண்டும். பிறர் துன்பப்படும்படி நாம் பட்டாசு வெடிக்கக் கூடாது. வானில் சாகசம் செய்யும் ராக்கெட் போன்ற வெடிகளை வெட்ட வெளிகளில், குடிசைகள் இல்லாத பகுதிகளில் மட்டுமே வெடிக்க வேண்டும் என்பன போன்ற பாதுகாப்பு குறிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கியதோடு மாணவர்களிடம் பாதுகாப்பான தீபாவளியின் முக்கியத்துவத்தையும் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறினார்.
மாணவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளியாக அமைய தன்னுடையநல்வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டது.