புதுக்கோட்டை நகரிலுள்ள அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை நகராட்சி, நரிமேடு பகுதியில், சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் இயங்கும், அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் .மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: புதுக்கோட்டை, நகராட்சி நரிமேடு பகுதியில், சமூகப் பாதுகாப்புத் துறையின் சார்பில் ரூ.9.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் 35 குழந்தைகள் தங்கி பல்வேறு பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
அதன்படி, இந்த இல்லத்தில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு தேவையான தங்கும் அறை, கழிவறை வசதிகள், குடிநீர் வசதி, மின் வசதிகள், உணவு வகைகள் உள்ளிட்டவைகள் போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் குழந்தைகளுக்கு வழங்கப்படும்; உணவின் தரம் குறித்தும், உணவு அட்டவணையின்படி உணவுகள் குழந்தைகளுக்கு தரமான மற்றும் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த இல்லத்தில் தங்கி பயிலும் மாணவிகள் பயின்று வரும் வகுப்பு நிலைகள் குறித்தும், அவர்களுக்கு இல்லத்தில் கல்வி தொடர்பாக வழங்கப்படும் கூடுதல் பயிற்சிகள் குறித்தும் விரிவாக கேட்டறியப்பட்டது. மேலும் மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், மேலும் தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் மாணவிகளிடம் கேட்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இல்லத்திற்கு மாணவிகள் எளிதாக சென்று வரும் வகையில் சாலை வசதிகளை மேற்கொள்ள நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே இந்த இல்லத்தில் பயின்று வரும் மாணவிகளின் நலனிற்காக இல்லத்தினை தூய்மையாக பராமரிக்கவும்,
அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிடைப்பதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் ஷியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.