Close
ஜூலை 2, 2024 2:20 மணி

குடிமைப் பணி தேர்வுக்கு மீனவ இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி

புதுக்கோட்டை

மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்ட மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா  தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை  அமைச்சர்  சட்ட பேரவையில் அறிவித்ததன்படி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறை களை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in  -என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அல்லது விண்ணப்ப படிவங்களை திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் அலுவலகத்திலோ அல்லது புதுக்கோட்டை மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலோ அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம்,  மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு திருச்சி (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர்  அலுவலகம் அல்லது புதுக்கோட்டை மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

அலுவலக முகவரி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், பிளாட் எண்-01, டவுன் நகரளவு எண்- 233/1, அன்னை நகர், நிஜாம் காலணி விஸ்தரிப்பு, புதுக்கோட்டை- 622 001, அலுவலக தொலைபேசி எண் 04322- 266994 ஆகும் என்ற தகவலை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top