புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், மாவட்ட தொழில் மையம் சார்பில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தொடக்கி வைத்து, பயிற்சியாளர் களுக்கான உபகரணங்கள் மற்றும் கையேட்டினை வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; ஏழை, எளிய பொதுமக்களின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல் படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் பட்டியலினத்தவர், பழங்குடி யினருக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு செயற்கை ஆபரணம் தயாரித்தல் பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் கையேடு வழங்கி தொடக்கி வைக்கப்பட்டது.
இந்த பயிற்சியானது 30.11.2023 முதல் 13.12.2023 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சி தங்களது வீடுகளுக்கு அருகாமை யிலேயே நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் போது பயிற்சி உபகரணங்கள், சீருடை, உணவு வழங்கப்படும். இந்த பயிற்சி மத்திய அரசின் மேம்பாட்டு சான்றிதழ் பெற்ற பயிற்றுநரால் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியின் இறுதிநாளில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், வங்கிக் கடனுதவியும் வழங்கப்பட உள்ளது.
எனவே இப்பயிற்சியினை நல்ல முறையில் முடித்து, தாங்கள் பெறும் கடனுதவியின் மூலம் தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, காரைக்குடி மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் எ.எழிலரசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் திரிபுரசுந்தரி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் கலைச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.