புதுக்கோட்டை ,நிஜாம் காலனி, என்.ஜி.ஓ.காலனி. எஸ்.எஸ். நகர், அன்னை நகர், பாமா நகர் உள்ளிட்ட பகுதிகளைக் கொண்டஆனந்தாபாக் பொதுநலச் சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் சமய நல்லிணக்கப் பொங்கல் நிஜாம் ஓரியண்டல் அராபிக் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதலில் இந்தப் பகுதியைச் சேர்ந்த பள்ளிக்குழந்தைகள் மற்றும், பெரியவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டது. பின்னர் அனைத்துச் சமூகத்த வரும் இணைந்து பொங்கல் வைத்து, அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாடினர். ஒருவருக் கொருவர் இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, புதுக்கோட்டை நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் லதா கருணாநிதி, ராஜாமுகமது, சிவக்குமார் மற்றும் மூத்த வழக்கறிஞர் சந்திரசேகரன், கவிதா மெட்டல் உரிமையாளர் முருகேசன், பேராசிரியர் பொ. அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நகர்மன்ற துணைத்தலைவர் லியாகத் அலி போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆனந்தா பாக் பொதுநலச் சங்கத் தலைவர் சா.விஸ்வநாதன் , செயலர் சத்யா, பொருளாளர் ரத்தினம் மற்றும் துணைச் செயலர்கள் வேழவேந்தன், சையது இப்ரஹிம்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.