Close
ஜூலை 4, 2024 5:00 மணி

பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள்: புதுக்கோட்டை ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

பொங்கல் பரிசு தொகுப்புகளுக்கான டோக்கன் வழங்கும் பணியை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.1,000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களின் தொகுப்புகள் குறித்தும், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் மற்றும் மீன்மார்க்கெட் அருகில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்தும், மாவட்ட ஆட்சியர்ஐ.சா.மெர்சி ரம்யா   (09.01.2024) நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை எளிதான முறையில் வழங்கும் வகையில் 07.01.2024 முதல் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடை பெற்று வருகிறது. மேலும் 10.01.2024 முதல் 13.01.2024 வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.

அதனடிப்படையில்,  புதுக்கோட்டை நகராட்சி, மீன்மார்க்கெட் அருகில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக போதுமான அளவில் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பது குறித்தும், அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி கொள்முதல் செய்யப் பட்டுள்ள கரும்புகளின் அளவுகள் இருப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொது மக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

எனவே பொதுமக்கள் அனைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களை பெற்றிட, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் தெரிவிக்கப்பட்டுள்ள நாள் மற்றும் நேரங்களில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம் என  ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர்  புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

மேலும்  அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி, ஆரோக்கியமான உணவுடன் கல்வி கற்கும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சந்து நிறைந்த காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டம் புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 20 பள்ளிகளில் 2,645 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், உணவின் கால அட்டவணையின்படியும், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப போதுமான அளவில் உணவுகள் தரமான முறையில் தயாரித்து வழங்கப் படுவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வுகளின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், இணைப் பதிவாளர்-மேலாண்மை இயக்குநர் மு.தனலட்சுமி, நகராட்சி ஆணையர் ஷியாமளா, வட்டாட்சியர் கவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top