Close
டிசம்பர் 12, 2024 12:34 மணி

ஃபென்சால் புயல் மழை: வடக்கு மிதக்கிறது! தெற்கு தவிக்கிறது!!

வடகிழக்கு பருவமழை கைகொடுத்து வருவதால், அணைகளில் நீர் இருப்பு, 173 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பெய்த ஃபென்சால் புயல் மழையில் வடமாவட்டங்கள் இன்னும் மிதக்கின்றன. பல மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்து விட்டது. இதனால் வடமாவட்டங்களில் தண்ணீர் தேவை பெருமளவில் பூர்த்தியாகி விட்டது.

தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 224 டி.எம்.சி.,யாகும். இதில், மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட, 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., ஆகும்.

பெரும்பாலான அணைகள், ஒரு டி.எம்.சி.,க்கும் குறைவான கொள்ளளவு உடையவை. வடகிழக்கு பருவமழை காரணமாக, பல அணைகளுக்கு தொடர்ச்சியாக நீர் வரத்து உள்ளது. இதனால், அவற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய  நிலவரப்படி, 90 அணைகளிலும் சேர்த்து, 173 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.

அதிகபட்சமாக, சேலம் – மேட்டூர் அணையில், 79.7; ஈரோடு – பவானிசாகரில், 26.9; கோவை – பரம்பிக்குளத்தில் 12.7; திருவண்ணாமலை – சாத்தனுார் அணையில், 7.09 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.

அணைகளின் மொத்த கொள்ளளவில், 77.2 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. மழை தொடர்வதால், பல அணைகள் முழு கொள்ளளவை எட்டுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாக, நீர் வளத்துறையினர் தெரிவித்தனர்.

உண்மையில் வட தமிழகத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது. ஆனால் தென் தமிழகத்தில் இந்த ஆண்டு தென்கிழக்கு பருவமழையும் போதவில்லை. வடகிழக்கு பருவமழையும் கை கொடுக்கவில்லை.

குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையில் இப்போதைய சூழலில் அணையின் நீர்மட்டம் 142 அடியை தாண்டியிருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை அணையின் நீர் மட்டம் 119.75 அடி மட்டுமே உள்ளது. அணைக்கு விநாடிக்கு 450 கனஅடி நீர் மட்டுமே வருகிறது.

வைகை அணையின் நீர் மட்டம் 71 அடியை எட்டியிருக்க வேண்டும். ஆனால் தற்போது 53 அடி நீர் மட்டுமே உள்ளது. அணைக்கு விநாடிக்கு 700 கனஅடி மட்டுமே உள்ளது.

இதேபோல் தென் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் மட்டம் குறைவாகவே உள்ளது. அத்தனை கண்மாய்களும் நீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. டிசம்பர் 5ம் தேதியை தொட்டு விட்ட நிலையில் வரும் டிசம்பர் 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்து வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளன. டிசம்பர் இறுதிக்குள் போதுமான மழை பெய்து, அணைகள், கண்மாய்கள் நிரம்பாவிட்டால், விவசாய சாகுபடிக்கும் தண்ணீர் போதாது, கோடைகாலத்தை சமாளிக்கவும் திணற வேண்டியிருக்கும்.

எனவே தென்தமிழக மக்கள் வருணபகவானை வேண்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top