Close
டிசம்பர் 24, 2024 7:34 மணி

தண்ணீர் வராத 110 அடி போர்வெல்லை, மழைநீர் சேமிப்பு தொட்டியாக மாற்றி வெற்றி பெற்ற விவசாயி

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தண்ணீரைப் பூமியில் தேடாதே…. வானத்தில் தேடு என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதை அப்படியே பின்பற்றிய விவசாயியான இளைஞர் ஒருவர் தனது வயலில் செயல்படாமல் வீணாக இருந்த ஆழ்குழாய் போர்வெல் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்க `போர்வெல் ரீசார்ஜ்’ முறையைப் பயன்படுத்தி புதிய முறையில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீரை உயரச் செய்வதுடன், விவசாயத்தையும் சிறப்பாகச் செய்து அசத்தி வருகிறார் இவரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

திருவையாறு அருகே உள்ள அம்மையாகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ். சிறு வயது முதலே விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், வெளிநாட்டில் பணிபுரிந்தாலும் ஊருக்குச் சென்று தானும் விவசாயம் செய்ய வேண்டும் என எண்ணினார்.
சொந்த ஊருக்கு வந்த தினேஷ் மூன்று ஆண்டுகளாக விவசாயத்தை கவனித்து வந்த போதிலும், ஆற்றில் நீர் வராததால் ரொம்பவே கஷ்டப்பட்டார். இதையடுத்து, தனது நிலத்தில் 110 அடிக்கு போர்வெல் ஒன்றை அமைத்தும் சில காரணங்களால் அதில் தண்ணீர் வராமல் போனது.

இதனையடுத்து மீண்டும் வேறு இடத்தில் மற்றொரு போர்வெல் அமைத்து விவசாயம் செய்துவந்தார். இத்தனிப் பார்த்த ஊர்மக்கள், தண்ணீர் வராத குழாய்களைக் கழற்றி விற்பனை செய்து விடலாம் என யோசனை சொல்ல, தினேஷுக்கு மட்டும் இதைப் பயன்படுத்தி மழைநீரை சேமித்து நிலத்தடிக்குள் விடலாம் என்ற எண்ணம் தோன்றியது.

பின்னர் வீணாக இருந்த போர்வெல் குழாய்களைச் சுற்றி குழி வெட்டி மழைநீரும், வயலில் பாய்ச்சிய பிறகு வீணாகும் உபரி நீரும் நிலத்துக்கு அடியில் செல்லும் படி செய்து மழைநீரை சேகரிக்கத் தொடங்கியுள்ளார். இதை வேளாண்மைத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி விவசாயிகள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து தினேஷ் கூறுகையில், முன்பெல்லாம் எங்கள் பகுதியில் 30 அடியில் இருந்த நிலத்தடி நீர் தற்போது 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. காவிரி ஆற்றங்கரையை ஒட்டிய பகுதியிலேயே இந்த நிலை என்றால் மற்ற பகுதியின் நிலையை சொல்லவே வேண்டாம்.
மேலும், தண்ணீர் உப்பு கலந்த தண்ணீராகவும் மாறி வருகிறது. இதற்குக் காரணம் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போனதுதான். இதனால் மழைநீரை சேமிக்கும் அவசியத்தை உணர்ந்தேன்.
இதையடுத்து, செயல்படாமல் வீணாக இருந்த ஆழ்குழாய் போர்வெலை சுற்றி 10 அடி அகலம், ஆழம், நீளம் என குழி அமைத்து அதற்குள் குழாயை ஒட்டி 10 அடி ஆழத்துக்கு குழி எடுத்து கான்கிரீட் உறைகளை இறக்கினேன்.
பின்னர் 5 அடிக்கு கல், கரிக்கட்டை, ஜல்லி போன்றவற்றை நிரப்பி, நிலத்துக்குள் இருந்த ஆழ்குழாயில் தண்ணீர் செல்லும் அளவுக்கு ஓட்டை போட்டு அதில் நைலான் வலை கொண்டு குழாயைச் சுற்றி கட்டிவிட்டேன்.

இந்த பகுதி களிமண் பகுதி என்பதால் மழை பெய்யும்போது அவை உள்ளே சென்று படர்ந்து விடாமல் இருக்கவே இந்த நைலான் வலை. மழை பெய்யும்பொழுது உறைகளில் போடப்பட்ட பொருள்களின் வழியாக நீர் சுத்தம் செய்யப்பட்டு கசிந்து உள்ளே சென்று அதன் பிறகு வடிக்கட்டுவதற்காகப் போடப்பட்ட வலை வழியாக ஆழ்குழாய் மூலம் நிலத்தடிக்குள் சென்றுவிடும்.

மழைக் காலங்களில் வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பயிர் அழுகிவிடும் என்பதால், வாய்க்கால்கள் வழியாக வெளியேற்றுவார்கள். மழை நீரையும், வீணாகும் தண்ணீரையும் இந்த போர்வெல் ரீசார்ஜில் நிரப்பி விடுவதால் நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top