Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

புதுக்கோட்டை அருகே உயிரிழந்த பள்ளி மாணவர் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிதியுதவி

புதுக்கோட்டை

பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து புதுகை-தஞ்சை சாலையில் நடந்தமறியல் போராட்டம்

புதுக்கோட்டை அருகே நான்காம் வகுப்பு படிக்கும்  உயிரிழந்த மாணவனின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதியுதவி அளிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பன் விடுதி கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நேற்று நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் நிதிஷ்குமார் மதியம் பள்ளியில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

இதனை அடுத்து ஆசிரியர் மாணவனின் பெற்றோருக்கு போன் செய்து தங்கள் மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். உடனடியாக வந்து மாணவனை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்

அப்போது பெற்றோர்கள் தாங்கள் வெளியில் வேலைக்கு சென்று உள்ளோம்.அதனால் மகனை தாங்களே வீட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள் உறவினர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஆசிரியர் அழைத்துச் சென்று மாணவனை வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். சிறுவனை அவரது உறவினர்கள் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்த போது வழியிலேயே மாணவர்  உயிரிழந்தார்.

உடல்நிலை சரியில்லை என்று பள்ளியில் கூறியபோது ஆசிரியர் அவனை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல்  பெற்றோர்கள் இல்லாத போது வீட்டில் விட்டுச் சென்றதால், மாணவன் நிதிஷ்குமார் இறந்து போனதாக பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி சிறுவன் நிதிஷ்குமார் மறைவுக்கு நீதி கேட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே புதுக்கோட்டை தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் முள்ளூர் விளக்கில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கவனக்குறைவாக இருந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் சிறுவனின் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும். சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே சாலை மறியல் வாபஸ் பெறப்படும் என்று அவர்கள் கூறி விட்டனர். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தகவறிந்த  அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்த சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில் கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியர் மகேஸ்வரி மற்றும் உதவி ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள் ளதாகவும், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கி தரப்படும் என்று   உறுதி அளித்ததன் பேரில் 5 மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து, மாணவரின் குடும்பத்துக்கு அரசின் சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top