Close
செப்டம்பர் 20, 2024 1:36 காலை

குருதிக்கூடு சார்பில் கடந்த 20 மாதகாலத்தில் இதுவரையில் 2038 பேருக்கு குருதிக்கொடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை குருதிக்கூடு அமைப்பு

உதிரம் கொடுப்போம்.. உயிர்களை காப்போம்  எனும் உயரிய நோக்கத்துடன் புதுக்கோட்டையில் விதையாக தொடங்கி விருட்சமாக விரவியுள்ளது   குருதிக்கூடு  அமைப்பு.

இது தொடர்பாக குருதிக்கூடு அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் முத்துராமலிங்கம் கூறியதாவது:
கடந்த 2020- ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருந்த வேளையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிகளுக்கும், பிற நோயாளி களும் சிகிச்சை அளிப்பதற்கு இரத்தம் அவசிய தேவையாக இருந்த சூழ்நிலையில், குருதிக்கொடையாளர்களின் வருகையும் குறைவாக இருந்ததால் பலரும் தடுமாற்றத் திற்குள்ளாகினர். குறித்த நேரத்தில் குருதி கிடைக்காமல் தவிப்பிற்கும் உள்ளாகினர்.

அன்றைய இக்கட்டான காலகட்டத்தில், குருதிக் கொடை யாளர்களை ஒருங்கிணைத்து அதிக அளவில் இரத்ததானம் செய்யவைத்து எப்படியாவது, பல உயிர்களை உரிய நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குருதிக் கொடையாளர்களை ஒருங்கிணைக்க முடிவெடுத்தோம்.
அதன் விளைவாக கடந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி நண்பர்களின் கூட்டு முயற்சியால் குருதிக்கூடு என்ற விதையை புதுக்கோட்டை மாவட்டத்தில் விதைத்தோம்.

அதன் பலனாக அந்த இக்கட்டான காலகட்டத்தில் அன்றைய சூழலை புரிந்துகொண்டு பல நூற்றுக்கணக்கான குருதிக் கொடையா ளர்களும், தன்னார்வலர்களும், இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் அவசரம் கருதி தன்னார்வத்தோடு வந்து குருதிக்கொடை அளித்ததன் விளைவாக பலநூறு உயிர்களை காக்க முடிந்தது. அப்படியான நல் உள்ளங்களுக்கு இந்நேரத்தில் மீண்டுமொரு முறை கோடான கோடி நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்று விதைக்கப்பட்ட குருதிக்கூடு   இன்று விருட்சமாகி விரவி புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் குருதிக் கொடையாளர்கள், தன்னார் வலர்கள், மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் குருதிக்கொடை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது பெரும் உற்சாகத்தை  நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் பேராபத்து காலகட்டத்தை கருத்தில் கொண்டு இந்த குருதிக்கூடு அமைப்பு தொடங்கப்பட்டிருந்தாலும்.  அதன்பின்பு இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் விதமாக, இந்த அமைப்பின் நிறுவனர் முத்துப்பழம்பதியின் முழு முன்னெடுப்பாலும், அவருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் சகோதரர் மேட்டுப்பட்டி செந்திலின் தன்னலமற்ற சேவையாலும் இந்த 20 மாதகாலத்தில் இதுவரையில் 2038 பேருக்கு  குருதிக்கொடை அளிக்கப்பட்டுள்ளது மன நிறைவடைய செய்துள்ளது.

அதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காக்க இவ்வளவு பேரை கடந்த ஓராண்டுக்கும் மேலாக அலைபேசி யிலும், நேரிலும் தொடர்பு கொண்டு, நாள்தோறும் இதற்கென இரவு பகல் பாராமல் நேரம் ஒதுக்கி குறித்த நேரத்தில் இரத்தக் கொடையாளர்களை இரத்த வங்கிக்கு அழைத்து வந்து குருதிக்கொடை செய்ய வைத்து ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் சரி மற்ற நபர்களுக்கும் சரி அவர்களின் இரத்த தேவையை பூர்த்தி செய்வதற்குள், பிரசவ வலியை விட கூடுதல் வலியை சுமந்து கொண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி எதார்த்ததோடு இன்று வரை உழைத்து வரும் இந்த அமைப்பின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ரத்தக்கொடையாளர்களின்  சேவைக்கு ஈடு இணை ஏதும் கிடையாது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இராணியார் மகப்பேறு மருத்துவமனை, உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களுக்கு நாள்தோறும் 3 முதல் 5 பேர் வரை குருதிக் கொடையாளர்கள் அழைத்துச்சென்று குருதிக்கூடு அமைப்பு சார்பாக குருதிக்கொடை அளித்து வருகிறார்கள். அவர்களின் சேவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  உடனடியாகத் தேவைப்பட்ட A பாசிட்டிவ் இரத்தம்   கொடையளித்த பயாஸ் – ஐ பாராட்டிய நிர்வாகிகள்

அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை  புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைக்காக A பாசிட்டிவ் இரத்தம் உடனடியாகத் தேவைப்பட்ட சூழ்நிலையில் அடுத்த சில நிமிடங்களிலேயே  பயாஸ் என்ற சகோதரர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரவழைத்து குறித்த நேரத்தில் குருதிக்கொடை அளிக்க வைத்து, அந்த குழந்தையின் உயிரைக் காத்தது வரை இந்த  குருதிக்கூடு அமைப்பின் செயல்பாடு தொய்வின்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

குருதிக்கூடு அமைப்புக்கு வலுசேர்க்கும் வகையில் உள்ள நண்பர்களும் சரி பிற நண்பர்களும், கல்லூரி மாணவர்களும் முழு ஒத்துழைப்பு அளித்து தற்போதைய தேவையை உணர்ந்து தன்னார்வத்தோடு  குருதிக்கொடை அளிக்கவும், கொடையாளர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரவும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் உள்ளது என்றார் முத்துராமலிங்கம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top