Close
நவம்பர் 22, 2024 12:24 காலை

நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை(மார்ச்28-29) வெற்றி பெறச்செய்வோம்: ஏஐடியுசி தீர்மானம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த ஏஐடியுசி ஆலோசனைக்கூட்டம்

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வருகிற மார்ச் 28,  29  ஆகிய தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய 48  மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வோம் என  ஏஐடியுசி தஞ்சை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தஞ்சாவூர் கீழராஜவீதி மாவட்ட அலுவலகத்தில் தலைவர் வெ.சேவையா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை

நடைபெற்றது . மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன்  வரவேற்றார்.  மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெறும் 48 மணி நேர வேலை நிறுத்தத்தின் அவசியம் குறித்தும், வெற்றி பெறச் செய்ய வேண்டியது நோக்கம் குறித்தும் ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் நடைபெற்ற பணிகள் குறித்து வேலைஅறிக்கை சமர்ப்பித்தார். கூட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன்,பட்டு கைத்தறி சங்க மாநில தலைவர் கோ.மணிமூர்த்தி, கட்டுமான சங்க நிர்வாகிகள் பி.செல்வம், சீனி.சுகுமாரன்,அரசு போக்குவரத்து சங்க தலைவர் டி.தங்கராசு.

ஓய்வு பெற்றோர் சங்க துணை தலைவர் கே.சுந்தரபாண்டியன், டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், மின்வாரிய சங்க கோட்ட செயலாளர் எம். ராஜகோபால், அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் த. திருநாவுக்கரசு.

நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகிகள் சி.பாலையன், தியாகராஜன்,சுமை சங்க மாநில தலைவர் அ.சாமிக்கண்ணு, பிஎஸ்என்எல் சங்க மாவட்ட செயலாளர் சின்னப்பா, உடல் உழைப்பு சங்க நிர்வாகி எஸ்.பரிமளா,அரசு பண்ணை சங்க நிர்வாகி கு.பகத்சிங், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர். பி .முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, பொதுத் துறைகளை கார்ப்பரேட் பெரு நிறுனுவங்களுக்கு விற்கின்ற, விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

வருகின்ற 28 ,29 தேதிகளில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது . தஞ்சை மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வது. மார்ச் 28ஆம் தேதிநடைபெறும் மறியல் போராட்டம், 29 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றில் திரளாக தொழிலாளர்கள் பங்கேற்பது.

அதற்கு முன்பாக தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகரங்களில் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் பரப்புரை செய்வது, துண்டறிக்கை வினியோகிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

கட்டுமானத் தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள் ஆன்லைன் மூலமாக வாரிய பதிவு செய்வது, நல உதவிகள் விண்ணப்பிப்பது, ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பது உள்ளிட்ட நிதியுதவி பெற விண்ணப்பிப்பதற்கு ஒவ்வொரு முறையும் ரூபாய் 100 , 200 என்று செலவழிக்கும் சூழலும், ஆன்லைன் பதிவிற்காக காத்திருந்து நேரத்தை பல மணி நேரம் செலவழிக்க வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, நலவாரிய பதிவு, நல உதவிகள் பெறுவதை எளிமைப்படுத்தி, தொழிலாளர் துறை அலுவலகங்கள் மூலமாக விண்ணப்பித்து, தொழிலாளர் நலத் துறை அலுவலகங்களில் ஆன்லைன் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

நிலுவையிலுள்ள ஓய்வூதிய நிலுவை தொகைகளை உடனடியாக வங்கிகளில் வரவு வைக்க வேண்டும். ,மீனவர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற 18 -ஆம் தேதி நடைபெறும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை தஞ்சையில் சிறப்பாக நடத்துவது.

கச்சா விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி- பட்டு- கச்சாப் பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவது, நடுவூர், ஈச்சங்கோட்டை அரசு பண்ணை களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் நேரடியாக சம்பளத்தை வழங்க வேண்டும். ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாத சம்பள பாக்கியை உடன் வழங்கிடவும், இரண்டாண்டு சம்பள உயர்வு நிலுவைத் தொகை உடன் வழங்கிட அரசு மற்றும் பண்ணை நிர்வாகத்தை வலியுறுத்திவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top