நேர்மையானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
வழக்கறிஞர் எம்.ஏ.எம்.ராஜா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பெரியகுளம் முன்சீப் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக ஆரிப் ரகுமான் நியமிக்கப்பட்டார். அவருக்கு எதிராக தேனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த உண்மையை மறைத்து, அவர் அரசு வழக்கறிஞர் பதவிக்கு விண்ணப்பித்தார். அவரது பின்னணி குறித்து தேனி எஸ்.பி., சரியாக விசாரிக்காமல் பரிந்துரைத்துள்ளார்.
அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட ஆரிப் ரகுமானுக்கு தகுதி இல்லை. அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். தமிழக அரசு தரப்பில், மனுதாரர் ஆரிப் ரகுமான் உறவினர். தனிப்பட்ட விரோதம் காரணமாக இங்கு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆரிப் ரகுமான் எந்தவொரு கிரிமினல் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்ட நபர் அல்ல. அவருக்கு தேவையின்றி தேனி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது என தெரிவித்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு வழக்கறிஞர் என்பது பொதுவான பதவி. அதில், நேர்மையானவர்களை மட்டுமே நியமிப்பது அவசியம். அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்யும் போது, மனுதாரர் கிரிமினல் வழக்கில் ஈடுபட்டாரா, அப்படியானால் அதன் நிலை என்ன, தகுதி குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மதிப்பீடு செய்தனரா என கேள்வி எழுகிறது. எஸ்.பி., மேல் விசாரணை நடத்தவில்லை.
அதிகார வரம்பிற்கு உட்பட்ட போலீசாரால் பராமரிக்கப்படும் ஆவணங்களில் உள்ள தகவல்களை மட்டும் அறிக்கையாக தாக்கல் செய்தார். அது பாராட்டும் வகையில் இல்லை. அவர் கடமையை சரியாக செய்ய தவறியுள்ளார். அரசு வழக்கறிஞர் பதவிக்கு நியமிக்க பரிந்துரைக்கும் முன், ஆரிப் ரகுமானின் கடந்த கால செயல்பாடு விபரங்களை சரிபார்க்க தவறிவிட்டார்.விசாரணை அதிகாரியின் தரப்பில் ஏதேனும் தவறு உள்ளதா என்பதைக் கண்டறிய, எஸ்.பி., எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தவறான செயல்களை மறைக்க, போலீசார் முறைகேடாக விசாரித்து, எந்த காரணமும் குறிப்பிடாமல் குற்ற பத்திரிக்கையிலிருந்து ஆரிப் ரகுமான் பெயரை நீக்கியுள்ளனர். பொதுவான பணியிடங்களை நிரப்பும் முன் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதிகளை தாண்டி, அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை சரிபார்ப்பது முக்கியம். ஆரிப் ரகுமானை அரசு வழக்கறிஞராக நியமித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.