சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்க உதவும் வகையில்போக்குவரத்துக் காவலர்களுக்கு பழச்சாறு அளிக்கும் திட்டம் புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டது
சுட்டெரிக்கும் வெயிலைச் சமாளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் போக்குவரத்துக்காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை மாவட்டக்காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
சட்டம் – ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பது, குற்ற நிகழ்வுகள் தொடர்பான பணிகள் மட்டுமன்றி போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, சீரான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் சாலையை பயன்படுத்துவோர் அனைவரும் சாலை விதிகளை பின் பற்றுவதை உறுதி செய்வதும் காவல் துறையினரின் பணிகளில் ஒன்றாக உள்ளது.
இந்நிலையில், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது காவல் துறை பணிகளில் முக்கியமான ஒன்றாகும். இப்பணியைச் செய்யும் காவல் துறையினர் கோடைக் காலத்தில் கடும் வெயிலில் சாலைகளிலும், சாலை சந்திப்புகளிலும், நிழலுக் குக்கூட ஒதுங்க இயலாத இடங்களில் நின்று பணிபுரிய வேண்டியுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல் துறையினரை பாதுகாக்கும் வகையில், எலுமிச்சம் பழச்சாறு வழங்கும் ஒரு புதிய திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012-ஆம் ஆண்டில் அறிவித்தார்.
இந்நிலையில், எலுமிச்சை பழச்சாறுக்குப் பதிலாக நீர்மோர் வழங்க வேண்டுமென போக்குவரத்துக் காவல் துறையினர் வேண்டுகோள் வைத்ததைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் ஜுன் வரையிலான 4 மாத காலத்துக்கு போக்குவரத்து காவலர்களுக்கு அவரவர் விருப்பப்படி எலுமிச்சம் பழச்சாறு அல்லது நீர் மோர் வழங்கலாம் என அரசாணை வெளியிடப்பட்டது. அன்று முதல் ஆண்டு தோறும் கோடை காலத்தில் போக்குவரத்துக் காவலர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு அல்லது மோர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையப்பகுதியில் சனிக்கிழமை டைபெற்ற நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாள நிஷாபார்த்திபன் கலந்து கொண்டு போக்குவரத்துக் காவலர்களுக்கு பழச்சாறு வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
வெயிலின் தாக்கம் குறையும் வரை தினம்தோறும் போக்குவரத்து காவலர்களுக்கு நீராகாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்வில் புதுக்கோட்டை டிஎஸ்பி லில்லி கிரேஸ் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.