புதுக்கோட்டை மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் திங்கள்கிழமை(28.3.2022) நடைபெற்றது.
–
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 349 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் மின்னனு பிரெய்லி ரீடர் மற்றும் கைத்தாங்கிகளையும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 50 பயனாளி களுக்கு ரூ.1.97 லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களை யும் ஆட்சியர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.