நரிமேடு பகுதியில் ஏழு அடி நீளமுள்ள நாகப்பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்.
புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்கி வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக நகர் பகுதிகளுக்குள் இடம் பெயர்ந்து வருகின்றன.
காட்டுப்பகுதியில் இருந்து நகர்ப் பகுதிக்குள் வரும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் தீயணைப்புத் துறையினர் தினம்தோறும் ஐந்துக்கு மேற்பட்ட பாம்புகளைப் பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை நரிமேடு வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் ஏழு அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து அதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக புதுக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறை அலுவலர்கள் நரிமேடு பகுதிக்கு விரைந்து சென்று படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்த நாகப்பாம்பை லாவகமாக இடுக்கியைக் கொண்டு பிடித்து சாக்குப்பையில் கட்டி அடர்ந்த காட்டுப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர். ஏழு அடி நீளமுள்ள நல்ல பாம்பு வீட்டிற்குள் புகுந்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது