Close
செப்டம்பர் 19, 2024 11:13 மணி

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… தியாகுவின் கம்பிக்குள் வெளிச்சங்கள்..

அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… தியாகுவின் கம்பிக்குள் வெளிச்சங்கள்..

பாட்டாளி மக்களைக் பகையாளிகளாக பார்க்கும், சாதி ஆதிக்க பண்ணையார்கள் தான் தங்கள் இலக்கு என நிர்ணயித்தல், அழித்தொழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு அதன் பிறகு தலைமறைவு வாழ்கை வாழ்தல் , ஒத்த எண்ணங்கள் கொண்ட தோழர்களை ஒன்றிணைத்தல், அடுத்தடுத்த அழித்தொழிப்பு சம்பவத்திற்காக திட்டமிடுதல், புரட்சி முழக்கத்தை எழுப்புதல், வயல், வாய்க்கால் என தாண்டி வனங்களுக்குள் தப்பியோடுதல், ஊர்மக்களிடம் அகப்பட்டு உதை வாங்குதல் – பின்னர் சிறைபடுதல் இப்படித்தான் இந்த புத்தகம் ஒரு விறுவிறுப்பான திரைப்படக் காட்சி போல நகர்கிறது. தோழர் தியாகு இந்த நூலில் தனது அழித்தொழிப்பு போராட்டங்கள், அதில் கிடைத்த அமுத விஷ அனுபவங்கள், அரசியல் நிலைப்பாடுகள், சிறைவாசம் என பலவற்றை எளிமையாக, இயல்பாக சொல்லி செல்கிறார்.

ஓர் நூலின் வாயிலாக பகிர்ந்து, வாசிக்கிற நம்மை ஓர் நம்பிக்கையான சிறைச்சாலை அனுபவத்திற்கு கொண்டு செல்கிறார் தியாகு. அவர் தனது சிறை கம்பிக்குள் இருந்து கொண்டு ஏற்படுத்திய வெளிச்சங்கள், சுவருக்குள் இருந்துக் கொண்டு வரைந்த சித்திரங்கள் சமூக சிந்தனை கொண்ட சாமானியனின் பயணப் பாதையில் ஒரு ஒளியை பாய்ச்சும், ஒரு ஓவியத்தை வரையும் என்பதில் ஐயமில்லை.

சிறைச்சாலைகள் சிலருக்கு தவறை உணர்ந்து, திருத்திக் கொள்கிற இடமாக இருக்கிறது. பலருக்கு இன்னும் பெரிய குற்றங்கள் செய்ய தூண்டுகிற களத்தை, பெரிய சமூக விரோத கும்பல்களின் தொடர்பை உருவாக்கி தருகிற இடமாக அமைந்து விடுகிறது. ஆனால் ஆயுள் கைதியான தியாகு, கம்பிகளுக்குள் செய்த களப்பணிகளை, அறப்பணிகளை பட்டியலிடலாம்.
சக கைதிகளுக்கு பொதுவுடைமை வகுப்பு எடுப்பது, அதில் கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் பற்றி எளிமையாக விளக்குவது, ஆங்கில வகுப்பு எடுப்பது என்பதை தாண்டி மார்க்சின் “மூலதனம்” என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்தது. இப்படி பல நம்மை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. சிறைச்சாலையில் ஆயுள் கைதியாக அடைக்கப்பட்ட ஒருவர் இப்படியும் இருக்க முடியுமா என்ற ஆச்சரியம் எழுகிறது. போராளிகள், பொதுவுடைமைவாதிகள் எப்போதும் தெளிவாக ஒரே மாதிரிதான் இருப்பார்கள் என்பது இன்னும் ஒரு முறை உறுதிப்படுத்தப்படுகிறது.

மனித உரிமை மீறல்கள், எல்லா சிறைச்சாலைகளிலும், உலகின் எல்லா மூலைகளிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தோழர் சி.ஏ பாலனின் ‘தூக்கு மர நிழல்’, சிட்னி ஷெல்டனின் ‘இஃப் டுமாரோ கம்ஸ்’ மற்றும் கென்றி சாரியரின் ‘பாபிலோன்’ நாவலும் சிறைச்சாலை கொடுமைகள் மீதான ஒரு பார்வையும், புரிதலையும் தரும். இவை மூன்றை விட தோழர் தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள், நமக்கு சிறைப்படாமலேயே சிறைப்பட்ட ஒரு அனுபவத்தை கிடைக்க செய்யும்..,

இங்கிலாந்திலிருந்து..சண். சங்கர்…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top