புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில் ரெ.முத்துச்சாமி உடைக்கல் குவாரி விரிவாக்கம் செய்தல் தொடர்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மேலூர் கிராமத்தில், ரெ.முத்துச்சாமி உடைக்கல் குவாரியை விரிவாக்கம் செய்தல் தொடர்பாக, மேலூர் கிராமப்பகுதி பொதுமக்களுடனான கருத்துக்கேட்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (07.04.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உடைக்கல் குவாரி செயல்படுத்தும் முறைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையிலுள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மேலும் இக்கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள்; கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருமாறும் தண்ணீர் வசதிகள் செய்து தருமாறும் பள்ளிகளுக்கு வசதி வாய்ப்புகள் செய்து தருமாறும் கோரிக்கைகளை வைத்து இந்த உடைக்கல் குவாரியை வரவேற்று கருத்துகளை பதிவு செய்தார்கள்.
பின்னர் இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், உதவி இயக்குநர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) விஜயராகவன், உதவி பொறியாளர் ராஜராஜேஸ்வரி, வட்டாட்சியர் பெரியநாயகி மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.