எஸ்கேஎம் நிறுவனத்தில் வாகனம் மோதி இறந்த தொழிலாளி யின் குடும்பத்திற்கு அந்த நிறுவனம் சார்பில் ரூ.13.82 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கப்பட்டது.
எஸ் கே எம் நிறுவனத்தில் வாகனம் மோதி இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.13.82 லட்சம் நிவாரண உதவி வழங்கி, தொழிலாளர்களின் நலன் காக்கப்படும் என அந்நிறுவன நிர்வாக இயக்குநர் சந்திரசேகர் உறுதியளித்தார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்கேஎம் கால்நடை தீவன உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த காமோத்ராம்(29) என்பவர், கடந்த 6-ஆம் தேதி கம்பெனிக்குள் ஆயில் எடுக்க வந்த தனியார் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு சம்பாதேவி(28) என்ற மனைவியும், மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த காமோத்ராம் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி எஸ்கேஎம் நிறுவனத்தில் ஏப்.12 -ல் நடந்தது. எஸ்கேஎம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகர் கலந்து கொண்டு, இறந்து போன தொழிலாளியின் மனைவியான சம்பாதேவியிடம், எஸ் கே எம் நிறுவனத்தின் சார்பில் ரூ.5 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கினார். மேலும், நிறுவனத்தின் காப்பீட்டின் மூலம் ரூ.8லட்சத்து 82ஆயிரத்து 182 வழங்குவதற்கான உறுதி படிவத்தையும் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து எஸ்கேஎம் நிர்வாக இயக்குநர் சந்திரசேகர் கூறியதாவது:எங்களது எஸ்கேஎம் நிறுவனமானது 40 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. நிறுவனத்திற்குள் தனியார் லாரி மோதி உயிரிழந்த பீகார் தொழிலாளியின் குடும்பத்திற்கு எங்களது நிறுவனத்தின் சார்பில் ரூ.5லட்சம் உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. காப்பீடு மூலம் அவருக்கு ரூ.8.82லட்சம் வழங்குவதற்கான உறுதி படிவமும் அளித்துள்ளோம்.
இது மட்டும் அல்லாமல் இஎஸ்ஐ மூலம் இறந்து போன தொழிலாளியின் குடும்பத்திற்கு பென்சனாக தோராயமாக ரூ.11ஆயிரமும், பிஎப் மூலம் தோராயமாக ரூ.3ஆயிரமும் மாதந்தோறும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மோட்டார் வாகன இழப்பீடு சட்டத்தின் மூலம் பலியான தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் வரை கிடைக்க வழி வகை செய்யப்படும்.எங்களது நிறுவனத்தில் எந்த விதமான குழந்தை தொழிலாளர்களும் பணியமர்த்தப் படவில்லை.
வடமாநில தொழிலாளி விபத்தில் இறந்தபோது, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு கைதான பாரத் பைத்தா(22), அனில்குமார்(20) ஆகியோர் தவறுதலாக குழந்தை தொழிலாளர்கள் என கூறி, இளஞ்சிறார் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசாரிடம் உரிய ஆவணங்கள் மூலம் இருவரும் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதை உறுதி செய்தோம்.
இதன்மூலம் அவர்கள் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தின் மூலம் எங்களது நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாகவும், சுவரொட்டி மூலம் நிறுவன பெயரை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். எங்கள் நிறுவனம் தொழிலாளர் நலச்சட்டங்களின் படி அனைத்து விதிமுறைகளையும் கடைபிடித்து, தொழிலாளர் நலனில் அதிக அக்கரை எடுத்து செயல்பட்டு வரும் நிறுவனமாகும். தொழிலாளர்களின் நலன் எப்போதும் காக்கப்படும் என சந்திரசேகர் குறிப்பிட்டார்.