புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வரி மற்றும் வாடகை பாக்கியை வசூலிப்பதற்கு நூதன முறையை பின்பற்றிய நகராட்சி அதிகாரிகள்
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வணிகம் செய்து வரும் வியாபாரிகள் மற்றும் நகராட்சி நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ள வணிகர்கள் பல ஆண்டுகளாக சொத்து வரி மற்றும் குத்தகை வரிகளை கட்டாததால் சுமார் 5 கோடி ரூபாய் வரையில் வரி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து அவற்றை வசூல் செய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இன்று நகராட்சி வருவாய் அலுவலர் விஜயஸ்ரீ தலைமையிலான அதிகாரிகள் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள அரசு மதுபான கடை முன்பு குத்தகை பாக்கியை உடனே செலுத்த வலியுறுத்தி பதாகை வைத்ததோடு 10 நாட்களுக்குள் குத்தகை பாக்கி செலுத்தாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல் புதுக்கோட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே செயல்படும் வணிக கட்டிடம் முன்பும் அதேபோல் பழைய நகராட்சி அலுவலகம் அருகே செயல்படும் ஒரு வணிக கட்டிடம் முன்பும் சொத்து வரியை உடனடியாக கட்டக்கோரி பதாகைகளை அதிகாரிகள் அந்தக் கட்டிடங்கள் முன்பு வைத்தனர்.மேலும் குறிப்பிட்ட நாட்க ளுக்குள் சொத்து வரியை சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் கட்டாவிட்டால் மீண்டும் அந்த இடத்தை நகராட்சி கையகப்படுத்தும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.