புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்போதைப் பொருள் தீங்கு குறித்த விழிப்புணர்வு போட்டியில்வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், போதைப் பொருள் தீங்கு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (19.04.2022) சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது; சமூகத்தில் தீய பழக்க வழக்கங்களுக்கு மாணவர்கள் அடிமையாகாமல் தற்காத்துக்கொள்ளும் வகையிலும், அடிமையான மாணவர்களை இனம் கண்டு அவர்களை நல்வழப்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்மூலம் தீய பழக்க வழக்கங்கள் தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பேதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீண்டுவர பள்ளி அளவிலான குழுக்களை அமைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் போதை பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கும்பொருட்டு மாணவர் பாதுகாப்புக் குழு ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொரு மாதமும் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடத்தி பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையின் மூலம் போதை பழக்கத்திலிருந்து மீள்வதற்கும், அவர்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பதற்கும் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதுசார்ந்து பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பள்ளி குழுவானது ஆண்டு முழுவதும் கண்காணிப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு, போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க ஆண்டு கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு அதுதொடர்பான பதிவேடுகள் பராமரிக்கப்படும்.
எனவே ஆசிரியர்கள் அனைவரும் இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களின் பழக்க வழக்கங்களை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு.
அதனைத் தொடர்ந்து போதைப் பொருள் தீங்கு தொடர்பான சுவரொட்டிகள் தயாரித்தல் மற்றும் வாசகம் தயாரித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,000 மும், இரண்டாவது பரிசாக ரூ.1,000 மும், மூன்றாம் பரிசாக ரூ.500 -ம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்திமற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.