Close
நவம்பர் 22, 2024 2:38 மணி

புதுக்கோட்டை பொன்மாரி கல்வி நிறுவனங்களில் உலக புத்தக நாள் விழா

புதுக்கோட்டை

பொன்மாரி கல்வி நிறுவங்களின் நடந்த உலக புத்தகநாள் விழா

பொன்மாரி கல்வி நிறுவனங்கள், புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் இளங்கோவடிகள் இலக்கிய மன்றம் இணைந்து நடத்திய உலக புத்தக தின விழா   பொம்மாடி மலை பொன்மாரி கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவிற்கு இளங்கோவடிகள் இலக்கிய மன்ற தலைவர் முரு. வைரமாணிக்கம் தலைமை வகித்தார். அவர் தனது உரையில். வாசிப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்வியல் கோட்பாடாக இருக்க வேண்டும். மிகப்பெரிய செல்வந்தரான பில் கேட்ஸ், தினந்தோறும் 500 பக்கங்கள் வாசிக்கிறார்.

வாரத்தில் ஒருநாள் தனிமையான இடத்திற்கு சென்று படிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். புகழ் பெற்ற மனிதர்கள் எல்லோரும் தங்களின் இடையறாத வாசிப்பின் மூலமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.அது போல நீங்களும் வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

 விழாப் பேருரையாற்றிய கவிஞர் மு.பா. நன்றாக எழுத, பேச நல்ல வாசிப்பு மிக மிக அவசியம். அரசுப்பள்ளி ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்று பல ஆண்டுகள் ஆனபோதிலும், தொடர்ந்து கல்விப் பணியாற்றுவதற்கு எனது தொடர்ந்த வாசிப்பே காரணம்.

மேலும் தன்னம்பிக்கையை ஊட்டுவது இலக்கிய வாசிப்பு. ஆத்திச்சூடி, திருக்குறள், நாலடியார் போன்ற இலக்கியங்கள் மனிதர்களுக்கு நல்ல வாழ்வியல் செய்திகளை வழங்குவ தோடு தன்னம்பிக்கையையும் ஊட்டுகிறது. வாசிப்பின் மூலம் பெரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதற்கு டாக்டர் அப்துல் கலாம் மிகச் சிறந்த உதாரணம்.

அவர் தனது வெற்றிக்கு புத்தக வாசிப்பே காரணம் என்று குறிப்பிடுகிறார். எனவே மாணவச்செல்வங்களாகிய நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக்கொள்ள புத்தக வாசிப்பை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள் என்றார்.
முன்னதாக வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், தனது அறிமுக உரையில் 1995 ஆம் ஆண்டு முதல், உலக புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான சேக்ஸ்பியர், ஸ்பானிஷ் எழுத்தாளரான செர்வாண்டிஸ் போன்ற பல எழுத்தாளர்களின் நினைவைப் போன்றும் வகையில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. புத்தக வாசிப்பை இளையோர் களிடம் கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்த விழா கொண்டாடப்படுகிறது என்றார்.

புதுக்கோட்டை
பொன்மாரி கல்வி நிறுவனங்களில் நடந்த உலக புத்தக நாள் விழாவில் பாராட்டப்பட்ட செயலர் மு. ராமுக்கண்ணு

விழாவில் இளங்கோவடிகள் இலக்கியமன்ற துணைச் செயலாளர்கள் புலவர் கு.ம.திருப்பதி, சு.துரைக்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொன்மாரி கல்வி நிறுவனங்களின் தலைவர், ச.ராம்தாஸ், பொருளாளர் மருத்துவர் டி.எஸ். ராமமூர்த்தி, அறங்காவலர் ப. லெட்சுமணன், பொன்மாரி வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் சந்திரா ரவீந்திரன், இளங்கோவடிகள் இலக்கியமன்ற துணைச் செயலாளர் ந.புண்ணியமூர்த்தி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.

இளங்கோவடிகள் இலக்கியமன்ற செயலர் சத்திய ராம் இராமுக்கண்ணு விருந்தினர்களை அறிமுகம் செய்ததுடன் விழா நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார். முன்னதாக பொன்மாரிக்கல்வியியல் கல்லூரி முதல்வர் செ.இராஜலிங்கம் வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொன்மாரி விதியாலயா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ஜெயராணி நன்றியுரையாற்றினார்.

புத்தக வாசிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு வாசகர் பேரவை சார்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.  மேலும் ‘கல்விச்செம்மல்’ விருது பெற்ற பொன்மாரி கல்வி நிறுவனங்களின் செயலர் சத்தியராம் ராமுக்கண்ணு பாராட்டப்பட்டார். விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top