புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில், 52 திருநங்கைகளுக்கு மின்-அடையாள (e-ID card) அட்டையினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (09.05.2022) வழங்கினார்.
பின்னர் ஆட்சியர் கூறியதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 2008 -ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நல வாரியம் மூலமாக திருநங்கைகளுக்கான அடையாள அட்டை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருநங்கைகள் உரிமை பாதுகாப்பு சட்டம் 2019 மற்றும் விதிகள் 2020 -ன்படி, திருநங்கைகள் இணைய வழி மூலமாக அடையாள அட்டை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட் டுள்ளது.
மேலும் திருநங்கைகள் என்ற கைபேசி செயலியும் உருவாக்கப்பட்டு, அவர்களது சுயவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 86 திருநங்கைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 72 பேருக்கு இணைய வழி அல்லாத சாதாரண அடையாள அட்டை கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டது.
தற்போது அவர்களுக்கான சேவைகளை எளிதாக பெறுவதற்காக திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் மின்-அடையாள அட்டை (e-ID card) முதற்கட்டமாக 52 திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே திருநங்கைகள் அனைவரும் மின்-அடையாள அட்டையினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனறார் ஆட்சியர் கவிதா ராமு.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.