புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறாமல் எலி விஷம் போன்ற பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யும் விற்பனை யாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துக் கடைகளிலும் எலி பேஸ்ட், கரப்பான் கொல்லிகள், கொசு விரட்டி போன்ற வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக் கொல்லிகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சிக்கொல்லி விற்பனை உரிமம் அவசியம் எனவும், உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள், பேரங்காடிகள் போன்றவற்றில் எலி பேஸ்ட், கரப்பான் கொல்லிகள், கொசுவிரட்டிகள் போன்ற வீட்டில் பயன்படுத்தும் பூச்சிகொல்லிகள் விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன் படி குற்றமாகும்.
வீடுகளில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளைக் கடைகளில் விற்கவும் உரிமம் பெறுவது அவசியமாகும். இதற்குத் தேவையான உரிமத்தினைப் பெறத் தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நகர்ப்புறத்தில் ஒரு பூச்சிக்கொல்லிக்கு ரூ.500- என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.7500- செலுத்தியும், ஊரகப் பகுதியில் ஒரு பூச்சிக்கொல்லிக்கு ரூ.100- என்ற வீதத்தில் அதிகபட்சம் ரூ.1500- செலுத்தியும் உரிமம் பெற்றுக் கொள்ளலாம்.
உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . எனவே, அனைத்துப் பெட்டிக்கடை, மளிகைக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் (Super Market) விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் எனவும், பூச்சிக்கொல்லிச் சட்டம் 1968-இன்படி உரிய பதிவேடுகளையும் ஆவணங்களையும் பராமரிப்பதோடு விற்பனை செய்வதற்கு உரிய பட்டியலையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளை உணவுப் பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டுப் பயன்பாட்டுப் பூச்சிக்கொல்லிகளை விற்பனை செய்யக் கூடாது.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநர், புதுக்கோட்டை 6381741240, கந்தர்வகோட்டை 9787967472, திருவரங்குளம் 9159983601, கறம்பக்குடி 9787012704, அறந்தாங்கி 9080709899, ஆவுடையார்கோவில் 9442325600, மணமேல்குடி 9159983601, திருமயம்; 978752914, அரிமளம் 9965668408, பொன்னமராவதி 6379701311, அன்னவாசல் 9442516485, விராலிமலை 9443006322, குன்றாண்டார்கோவில் 8248198738 ஆகிய எண்களில் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.