புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், 1431 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்வு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும்;, கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கிராமக்கணக்குகளை ஒவ்வொரு வருடமும் அந்தந்த பசலியின் (வருடம்) இறுதி மாதத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர்களால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி நடப்பு பசலி 1431 வருடத்திற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், கறம்பக்குடி சரகத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நிகழ்வில் கிராம கணக்குகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இதில் பொதுமக்களிடமிருந்து பட்டாமாறுதல், முதியோர் உதவித்தொகை, வீடு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 106 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதனையொட்டி குடிமக்கள் பங்கு பெறும் குடிகள் மாநாடு இன்றையதினம் நடைபெற்றது. இக்குடிகள் மாநாட்டில் 2 பயனாளிகளுக்கு ரூ.24,000 மதிப்பீட்டில் விதவை உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.24,000 மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகையும், 2 பயனாளிகளுக்கு ரூ.45,000 மதிப்பீட்டில் இறப்பு நிவாரணத்தொகையும்.
2 பயனாளிகளுக்கு ரூ.18,000 மதிப்பீட்டில் திருமண உதவித் தொகையும், 25 பயனாளிகளுக்கு மின்னனு குடும்ப அட்டை நகல்களும், 8 பயனாளிகளுக்கு ரூ.22,695 மதிப்பீட்டில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத் தின்கீழ் வேளாண் இடுபொருட்களும், 5 பயனாளிக ளுக்கு ஆதரவற்ற விதவை சான்றும் என மொத்தம் 46 பயனாளிக ளுக்கு ரூ.1,33,695 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டது.
எனவே தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள், இதனை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்கவிதா ராமு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார், தோட்டக்கலை துணை இயக்குநர் குருமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், உதவி இயக்குநர் (நில அளவைத்துறை) திரவியசாமி, மாவட்ட ஆட்சியரக அலுவலக மேலாளர் செந்தமிழ்குமார், வட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.