Close
நவம்பர் 21, 2024 6:43 மணி

முதியோர் காப்பகங்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகள் அல்ல…

கோயம்புத்தூர்

ஈரநெஞ்சம் அறக்கட்டளை

அந்த ஊருல இருபது பேர் கொண்ட ஒரு முதியோர் காப்பகம் இருந்தது .

காலை விடிந்தது வயோதிகம் நிறைந்த முகங்கள், பசி படர்ந்த வயிறு வாடிய தோற்றம் விருந்தினர் உணவை எதிர்பார்த்து எதிர்பார்த்து மணி 11 -ஐ தாண்டியது..

ஒரு சிலர் பகட்டுடை உடுத்து காப்பகத்திற்கு வந்தனர் யார் நிர்வாகம் என்றனர், வெளிநாட்டு உதவியா என்றனர், யாருடைய உதவி, என்ன நோக்கம் என்று இன்னும் பல கேள்விகள் கேட்டனர். வயிறு நிறைய பசி மட்டுமே இருந்தும் எல்லாவற்றிற்கும் பணிந்த குரலில் பதில் தந்தனர்…

சந்தேகங்கள் தெளிவானதும் பழைய துணி இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள் என்று கொண்டுவந்த மூட்டையாக கட்டிய துணியை தானம் செய்து கிளம்பினர்…

உள்ளே ஒரு வயதான பாட்டி வாடிய குரலில் ” அப்போ அவங்க சாப்பாடு கொடுக்க வரலையா ” என்று முனங்கியது…காலை பசி தாண்டி மதிய பசி வேளை வந்தது…பசி மயக்கத்தில் இருந்த முதியவர்களை தேடி மற்றும் சிலர் வந்தார்கள் …

அவர்களும் அதே கேள்விகளை வெவ்வேறு விதமாகக் கேட்டு விசாரணைக்கு பிறகு , காலையில் சமைத்த உணவு 10 பேருக்கு மீதம் இருக்கும் அதை கொடுக்க வந்தோம் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று தானம் செய்து விட்டு கிளம்பினர். நல்ல வேளை உணவு கெடாமல் இருந்தது அதை இருபது பேரும் பங்கிட்டு தங்களது பாதி வயிற்றை நிறைத்தனர்…

மாலை வந்தது ஒரு குடும்பம் வந்தது , அவர்களும் முன்பு வந்தவர்கள் கேட்ட கேள்வியை காட்டிலும் இன்னும் கூடுதலாக தங்களை தெளிவு படுத்திக் கொள்ள பல விளக்கங்களை கேட்டு விட்டு முடிவில் , தங்கள் வீட்டுக்கருகில் இருக்கும் ஒரு பாட்டியை தங்கள் காப்பகத்தில் சேர்க்க வந்துள்ளோம்.

இங்கே இலவசமாக பார்த்துக் கொள்வதாக கேள்விப்பட்டோம் ஆதரவற்ற பாட்டியை பராமரிக்க சொந்தமென்று யாருமில்லை என்று கூறி மூன்று தலை முறை கண்ட முப்பது சொந்தங்களுக்கு சொந்தக்காரியை சொந்தங்களே காப்பகத்தில் விட்டு சென்றனர்.

ஈரநெஞ்சம்

முதிய வயதில் புதிய தோழிகள் கிடைத்த மன ஆறுதலில் தன் கதையைப் பகிர்ந்து சோகத்தை ஓரளவு கரைத்துக் கொண்டது அந்த புது பாட்டி.

சற்று நேரத்தில் ஒரு தம்பதியினர் வந்தார்கள் தங்கள் குழந்தைக்கு இந்த தேதியில் பிறந்தநாள் வருகிறது, அதனால் ஊரில் உள்ள பெரிய ஹோட்டலில் உயர்தர உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றனர். ஆனால் வயோதிகத்திற்கு அந்த உணவு ஏற்காது வேறு ஏதாவது என்று வேண்டுகோள் முன் வைக்க . நாங்கள் வேறு இடம் செல்கிறோம் என்று வருத்தத்தில் விடை பெற்றனர்.

இரவு பசி வேளை வந்தது கூடவே கூடுதலாக பசியும். கூட.. கண் உறங்குவதற்கு முன் வாசலில் ஒரு வாகனம் வந்தது அதில் இருந்து வந்தவர்கள் திருமண விழாவில் 50 பேர் சாப்பிடும் அளவிற்கு உணவு மீதியாகி விட்டது அதை கொடுக்க வந்துள்ளோம் என்று சொல்லி முடிப்பதற்குள் , பசி முந்திக் கொண்டு வாய் திறந்து கண்டிப்பாக ஏற்றுக் கொள்கிறோம் என்று அந்த உணவை பெற்றுக் கொண்டது.

கல்யாண வீட்டில் சாப்பாடு மதியம் செய்தது போல சாதம் தவிர மற்ற பதார்த்தங்கள் எல்லாம் கெட்டுப்போய் லேசான வாடையால் காட்டிக் கொடுத்தது , பதார்த்தங்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, வெறும் சாதத்தில் தண்ணீர் ஊற்றி கரைத்து காப்பகத்தில் உள்ள 21 பேரும் குடித்து விட்டு அன்றைய பொழுதை நிறைவு செய்தனர். அடுத்த நாள் காலையுணவுக்கு மீந்து போன சாதம் இருக்கும் நிம்மதியுணர்வுடன் அனைவரும் உறங்க சென்றனர்.

முதல் நாள் வந்த கந்தல் துணியோடும், மீதம் இருந்த கல்யாண வீட்டு கஞ்சியோடும் விடியலுக்காக காத்திருந்தது அந்த காப்பகம்..!!!

தங்கள் வீடுகளில் தேவையில்லாத குப்பையாக கருதிய முதியவர்களை , காப்பகத்தை குப்பைத் தொட்டியாக எண்ணி விட்டுச் செல்லும் நபர்களுக்கு தெரிவதில்லை தாங்கள் விட்டுச் செல்வது முதிய உறவினரை அல்ல “அனுபவம் உரைக்கும் நூல்” என்றும்… முதியோர் காப்பகங்கள் எல்லாம் குப்பைத் தொட்டிகள் அல்ல, “பல்கலைக்கழக நூலகங்கள்” என்பதும்…

~ஈரநெஞ்சம் மகேந்திரன்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top