புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை பேரூராட்சி களின் உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொன்னமராவதி பேரூராட்சியில் ரூ.5 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தில் சந்தை மேம்பாடு, அமரகண்டான் ஊரணி மேம்பாடு, பேவர் பிளாக் சாலை, அமைத்தல் பணி, 15 -ஆவது நிதி குழு திட்டத்தின் கீழ் மேல்நிலைதொட்டி புணரமைத்தல், கழிப்பறை புணரமைத்தல் பணிகள், நமக்கு நாமே திட்டத்தில் சிமெண்ட் கல் பதித்தல் போன்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் மேலும் கூறியதாவது: பணிகளைச் செய்து வரும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் இப்பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பேருந்து நிலையத்தை அபிவிருத்தி செய்ய தல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய சாத்திய கூறுகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார் அவர்.
இந்த ஆய்வின் போது பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், இளநிலை பொறியாளர் செல்லமுத்து, பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் மற்றும் பணியாளர்கள் உறுப்பினர்கள் என பலர் உடனிருந்தனர்.