புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் கூட்டுத் தூய்மைப்பணி(மாஸ் கிளீனிங்) நகர்மன்றத் தலைவர் திலகவதிசெந்தில் முன்னிலையில் நடைபெற்றது.
இது குறித்து நகர் மன்றத்தலைவர் திலகவதிசெந்தில் கூறியதாவது:
சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது..
இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமைப் படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காங்களில் கூட்டங்கள் நடத்திடவும், அவர்களை கொண்டு தூய்மை மற்றும் சுத்தம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கவும், மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உழவர் சந்தைகளில் தினந்தோறும் சேகரமாகும் காய்கறி கழிவுகளை, உழவர் சந்தைகளிலேயே மக்கச்செய்து குப்பையாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், ஆயுதப்படை ஆய்வாளர் டி.எஸ்.கோபிநாத், உதவி ஆய்வாளர் சி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்