ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் தேதி “உலக உணவு தினம்“. இந்த நாள் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டது.
கூடவே அனைவருக்கும் உணவு பாதுகாப்பு மற்றும் சத்தான உணவுகளை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தவும் கொண்டாடப்படுகிறது.
அனைவருக்கும் உணவளிக்க இந்த உலகம், போதுமான உணவை உற்பத்தி செய்தாலும், அப்படி உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிற நிலையில் கிட்டதட்ட 821 மில்லியன் மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 60% பெண்கள் என்பதும், இதில் 70% கிராமப் புறங்களில் வாழ்கின்றனர் என்பதும். அவர்களில் பெரும்பாலோர் விவசாயத்தை நம்பியிருக்கிறனர் என்பதும் வேதனை.
மலேரியா, காசநோய் மற்றும் எய்ட்ஸ் நோயைக் காட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் பசிதான் அதிக மக்களைக் கொல்கிறது. குழந்தை இறப்புகளில் கிட்டத்தட்ட 45% ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பானவை.
இப்படி பல புள்ளிவிவரங்கள், நிலவரத்தை சுட்டி காட்டினாலும், உணவு பஞ்சம் இல்லாத நிலை, இல்லை யென்கிற நிலையை எட்டிப்பிடிக்கிற நிலையில் நாமில்லையென்பதே நிதர்சனம்.
2050 வாக்கில் வேளாண்மை, தற்போதைய உற்பத்தி அளவை விட 50% அதிகமான உணவு, தீவனம் மற்றும் உயிர் எரிபொரு ளை உற்பத்தி செய்ய வேண்டும். அப்போது தான் ஒரு பசியற்ற உலகத்தை காணமுடியும். இதுகூட எதிர்பார்ப் பில் தொக்கி நிற்கும் கணிப்பு தான்.நம் நாட்டில் இன்னொரு சோகம் சாகும்வரை உயிர்வாழ உணவை தருகிற விவசாயி களால் வாழும்போதே விளைவித்த உணவை உண்ணமுடியாத அவல நிலை.
பாமரன் ருசித்து அறியாத பண்டங்களின் எண்ணிக்கை ஏராளம்.., பண்டங்களின் பண்டிகை தீபாவளி நெருங்கி வருகிற வேளையில் இது சார்ந்த எண்ணம் நமக்கு கூடுதலாக வருகிறது.
சரிவிகித உணவின் மகத்துவத்தை வயிற்றுப்பசியில் இருக்கும் பாமரனிடம் பேசாவிட்டாலும் சராசரி உணவைப் பற்றி கூட பேச இயலாத சூழலில் தான் நம் தேசம் இருக்கிறது..,
உணவு தேர்வையும், உணவு அரசியலையும் பேசுகிற இந்த நேரத்தில், அவசியமான உணவுகளை வேண்டும்போது உண்ண முடியாத நிலையிலும், விரும்பிய உணவை விருப்பபடி உண்ண இயலாத நிலையிலும் நம்மில் பலர் இருக்கிறார்கள்.
பசி என்பது உலகம் அனைத்துக்குமான பொது மொழி. என்றாலும், ஒருவருடைய பசியின் மொழியை நாம் உணருகிற தருணத்தில் அவர்களை பசியோடு விட்டுவிடவேண்டாம்.
…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋