குளிர்காலம் வரும்போது பனிமனிதன் செய்வது என்பது அந்த பருவத்தின் உணர்வை வெளிப்படுத்துகிற, கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டத்தை முன்கூட்டியே கொண்டு வருகிற ஒரு அடையாள சின்னமாக நாம் பார்க்கலாம்.
வசந்த காலத்தில் பூ பூப்பது போல. குளிர் பிரதேசங்களில் மிகவும் நன்கு அறியப்பட்ட பருவகால உருவமான பனிமனிதன், குதூகலத்தையும் குளிர் உணர்வையும் ஒரு சேர
நம் மனதில் கொண்டு வந்து சேர்க்கிறான்.
சரியான பனிப்பொழிவு வரும்போது, பனிமனிதன் வழக்கமாக நம் வீட்டு முற்றத்தில் வந்து விடுகிறான். ஒரு பருவ கால நண்பரை நம் வீட்டிற்கு அழைத்து வந்த துள்ளல் நமக்குள்.
பனிமனிதனின் உடலைச் சித்தரிப்பதற்கு பனிப்பந்துகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்படுகின்றன, கண்களும், மூக்கும், வாயும் வைக்கப்பட்டு அதன் அழகை கூட்ட ஆக்கப்பூர்வமாக தொப்பி, கழுத்து துண்டு என இன்னும் சில பொருட்கள் சேர்க்கப்பட்டு , ஒரு உருவத்தை கொணர்கிற போது , பனிமனிதனை உருவாக்கும் ஒவ்வொருவரும் ஒரு சிற்பியை போல தான் உணர்கிறார்கள்.
இத்தகைய படைப்புருவாக்கத்திற்கு கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் ரசனை, கொஞ்சம் அழகியல் உணர்வு இவை தான் தேவைப்படுகிறது.
பனிமனிதன் வடிவம் மற்றும் அளவு எதுவாக இருந்தாலும், ஈரமான பனி, உருகாமல், நெருக்கமாகவும், கச்சிதமாகவும் இறுகிய படி சில நாட்கள் இருந்தால் போதும், பனிமனிதனை உருவாக்கியவரின் உள்ளம் குளிர்ந்து விடும்.
பனிமனிதனை உருவாக்குகிற பழக்கமும், வழக்கமும் எப்போது எங்கு தொடங்கியது என்று நமக்குத் தெரியாது. இருப்பினும் அதற்கு பழமையான ஒரு பாரம்பரியம் இருந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக குழந்தைகளும் பெரியவர்களும் பனியை ஒன்று திரட்டி, பெரிய மேடுகளாக உருட்டி, பின்னர் அவற்றை அடுக்கி, மனித உடல்களை உருவாக்கி இருக்கிறார்கள்.
தொப்பிகள், மேலாடைகள், குச்சிகள் மற்றும் காய்கறிகளை கொண்டு பனி மூலம் மானுடக் குவியலை உருவாக்கியிருக்கி றார்கள். குழந்தைகள் பனிமனிதர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், பெரியவர்களும், மானுட உருவத்தை உருவாக்கி, வெளிப்புற காட்சியகங்களில் பனி உருவாக்கத் தில் உருவான பல்வேறு கலை அம்சங்களை காட்சிப்படுத் தியிருக்கின்றனர்.
நகரத்தை சுற்றியுள்ள மக்கள் இதை கேளிக்கையாக மட்டும் பார்க்காமல், ஒவ்வொரு உறைந்த காட்சியின் தரத்தை, தகுதியை, படைப்பு திறனை பொதுவெளியில் விவாதித்து வந்திருக்கின்றனர் என வரலாறு சொல்கிறது.
ஆக பனிமனிதர்கள் உருவாக்கம் சமூகத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது..அது இன்றுவரை உலகின் பல குளிர் தேசங்களில் இந்த பாரம்பரிய சங்கிலி அறுப்படாமல் தொடர்வது வியப்பளிக்கிறது.
மனிதன் இந்த பூமியில் நடந்து வரும் வரை, வானத்திலிருந்து பனி விழும் வரை, நாம் பனிமனிதனை உருவாக்கும் முனைப்பு நம்முடன்கட்டாயமாக இருக்கும். எனவே கேளிக்கைக்காக, களிப்புக்காக படைக்கப்படுகிற பனிமனிதன் வருடத்திற்கு ஒரு முறை நம் வீட்டிற்கு வந்து போவான்.
…இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋