Close
நவம்பர் 22, 2024 12:37 காலை

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா… சுவாரஸ்ய தகவல்கள்

இங்கிலாந்திலிருந்து சங்கர்

இங்கிலாந்து இளவரசர் முடிசூட்டு விழா

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல்கள் உங்கள் பார்வைக்கு..

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா பிரித்தானிய அரச வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாக வரலாற்றில் இடம்பெறும் ஒரு நிகழ்வாகும். புதிய மன்னர் முடிசூட்டப்படுவதை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

முடிசூட்டு விழா இந்த வார இறுதியில் 2023 மே 6 –ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கி 8 -ஆம் தேதி திங்கட்கிழமை நிறைவு பெறுகிறது. சனிக்கிழமையன்று, வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடக்கும் சிறப்பான விழாவில் ராஜா மற்றும் ராணி அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்படுவார்கள். உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் தொலைக்காட்சியில் இதைப் பார்ப்பதற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மே 8 திங்கட்கிழமை எங்களுக்கு அரசு விடுமுறை. இங்கிலாந்தின் பல இடங்களில் ஸ்ட்ரிட் பார்ட்டி எனப்படும் சாலை விருந்து ஏற்பாடு செய்து, நண்பர்கள் அண்டை வீட்டார்கள் ஒன்று கூடி தேநீர் மற்றும் தின்பண்டங்களை பரிமாறிக்கொள்வார்கள்.பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள், பெற்றோர்கள் வேலைக்கு செல்ல மாட்டார்கள்.

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா இருவரும் கலந்து பேசி முடிசூட்டு விழாவின் அதிகாரப்பூர்வ அரசு உணவு, பட்டாபிஷேக பதார்த்தம் கீஸ் (coronation quiche) என அறிவித்துள்ளனர்.

புதிய பிரிட்டிஷ் மன்னரின் முடிசூட்டு விழா லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறுகிறது. வெஸ்ட் மின்ஸ்டர் அபே இங்கிலாந்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த இடமாகும், இது 900 ஆண்டுகள் பழமை மிக்க தேவாலய மாகும், இந்த இடம் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக முடிசூட்டு விழாக்கள், திருமணங்கள் மற்றும் அரச குடும்பங்களின் இறுதிச் சடங்குகள் நடைப்பெறும் தளமாக விளங்குகிறது.

தற்போது புதிய மன்னர் முடிசூட்டப்படுவதற்கு புதுப்பொலிவுடன் தயார் நிலையில் உள்ளது. 1953 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற ராணி எலிசபெத்தின் முடிசூட்டு விழா ஊர்வலம், சுமார் 5 மைல் தூரத்திற்கு நடந்தது, அதற்கான கால அவகாசம் இரண்டு மணி நேரம் ஆனது. இந்த முறை, கிங் சார்லஸ் மற்றும் குயின் கமீலாவின் ஊர்வலம் 1.3 மைல்கள் மட்டுமே அதாவது ராணி எலிசபெத்தின் ஊர்வல தூரத்தில் கால் பகுதி மட்டுமே.

பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து புறப்படும் “டயமண்ட் ஜூபிலி ஸ்டேட் கோச்” என அழைக்கப்படுகிற வாகனத்தில் மன்னரும் ராணியும் பயணிப்பார்கள். ஊர்வலம் அவர்களை வைட்ஹால் மற்றும் பார்லிமென்ட் தெருவில் இறக்குவதற்கு முன், அட்மிரால்டி ஆர்ச் வழியாக டிரஃபால்கர் சதுக்கத்திற்கு அழைத்துச் செல்லும். பின்னர் அவர்கள் பாராளுமன்ற வளாகத்தை சுற்றி, பரந்த வெளியில் கம்பீரமாக நிற்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு செல்வார்கள்.

முடிசூட்டு விழாவின் தொடக்கத்தில், கேன்டர்பரி பேராயர் சம்பிரதாயப்படி கூடி இருக்கும் கூட்டத்திற்கு மன்னரை அறிமுகப்படுத்துவார். அதன் பின் இங்கிலாந்து தேவாலயத் தையும் சட்டத்தையும் பாதுகாப்பதாக மன்னர் சார்லஸ் உறுதிமொழி எடுப்பார்.

பின்னர், அவர் 1300 -இல் செய்யப்பட்ட முடிசூட்டு நாற்காலி என்று அழைக்கப்படும் பாரம்பரியமிக்க பழைய மர நாற்காலியில் அமர செய்து, அவரின் தலை, மார்பு மற்றும் கைகளில் புனித எண்ணெய் பூசப்படும். அதன் பிறகு, மன்னருக்கு சிலுவை பொருத்தப்பட்ட தங்கத்தில் ஆன கோளவடிவ பந்தும், ஒரு செங்கோலும் இறையாண்மையின் சின்னமாக வழங்கப்படும். இறுதியாக, ஒரு சிறப்பு கிரீடத்துடன் மன்னர் முடிசூட்டப்பட்டு சிம்மாசனத்திற்கு செல்வார், எல்லோரும் தங்கள் மரியாதையைக் காட்ட மண்டியிடுவார்கள். ராணி கமீலாவும் அதைபின்பற்றி செல்வார்.

செயின்ட் எட்வர்ட் தி கன்ஃபெசரின் பெயரால் பெயரிடப்பட்டு, 1300 களில் இருந்து பிரிட்டிஷ் மன்னர்களுக்கு முடிசூட்டுவ தற்குப் பயன்படுத்தப்படுகிற செயின்ட் எட்வர்ட் மகுடமானது, பல நூற்றாண்டுகளாக எப்படி முடிசூட்டப்பட்டு வந்ததோ, அதே சடங்குகளுடன் மன்னன் சார்லஸ் முடிசூட்டப்படுவார்.

உள்நாட்டுப் போரின் போது இந்த கிரீடம் உருகி அதன் வடிவம் சிதைந்ததால், இந்த கிரீடத்தின் புதிய பதிப்பு 1661 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது, தற்போதைய கிரீடம், திடமான தங்கத்தால் ஆனது. அதில் 244 விலையுயர்ந்த கற்கள் உள்ளன! ராணி கமீலா வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட ராணி மேரியின் கிரீடத்தை அணிவார், அதில் 2,200 வைரங்கள் உள்ளன.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தனது சிறப்பு முடிசூட்டு விழாவிற்கு புதிய இசையை உருவாக்குமாறு மன்னர் பன்னிரண்டு சிறப்பு இசைக்கலைஞர்களை கேட்டுக் கொண்டார். பிரிட்டனின் சிறந்த இசையமைப்பாளர்களின் திறமையை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பு! முடிசூட்டு விழாவில் ஆண்ட்ரூ லாயிட் வெப்பரின் புதிய பாடலும், பிரித்தானிய இசையமைப்பாளர்களால், மன்னர்களுக்காக உருவாக்கப்பட்ட பதினொரு பாடல்களும் அடங்கும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

ராணி எலிசபெத்தின் முடிசூட்டு விழாவை விட மிகச் சிறிய முடிசூட்டு விழாவை மன்னர் சார்லஸ் நடத்துகிறார்.அவருக்கு 8,251 விருந்தினர்கள் இருந்தனர், ஆனால் சார்லஸ் 2,000 பேரை மட்டுமே அழைத்திருக்கிறார். இந்திய ஜனாதிபதி உட்பட பல தேசத்து பிரதம மந்திரி மற்றும் அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பிரதிநிதிகள், அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இன்னும் பிற முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் இருப்பார்கள்.

இந்த பட்டாபிசேகம் பற்றி பேசுகையில், சிறப்பு அடையாள சின்னமாக வடிவமைக்கப்பட்ட முத்திரையை பேசியாக வேண்டும்.ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்த பிரிட்டன் வடிவமைப்பாளர் ஜோனி ஐவ் என்பவரால் வடிவமைக்கப்பட்ட, முடிசூட்டு விழாவிற்கான முத்திரையைகடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டார் சார்லஸ் மன்னர்!

இந்த சின்னத்தில் இங்கிலாந்தில் உள்ள நான்கு நாடுகளின் தேசீய மலர்கள் உள்ளன: இங்கிலாந்தின் ரோஜா, ஸ்காட்லாந்தின் திஸ்டில், வேல்ஸில் இருந்து டாஃபோடில் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருந்து ஷாம்ராக். இந்த பூக்கள் அனைத்தும் செயின்ட் எட்வர்டின் கிரீடம் போல தோற்றமளிக்கும் வகையில் ஒன்றாக இணைக்கப்பட்டு, யூனியன் ஜாக்கின் நிறங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து குடிமக்களுடன்  ஒருவனாக.. ஐக்கிய இராஜ்ஜியத்தின் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.சமுதா யத்திற்கும், தேசத்தின் பொது நலனுக்கும் பங்களிக்கும்
அனைத்து மக்களையும் மதித்து, ஊக்குவித்து, நினைவில் வைத்திருக்கும் தலைவராக நீங்கள் தொடர்ந்து இருங்கள்.
கடவுள் உங்களை ஆசீர்வதித்து, அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியின் பாதையில் உங்களை வழிநடத்தட்டும்.

இங்கிலாந்திலிருந்து  சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top