உலகத்தை சைக்கிளில் சுற்றி வரும் சுவிட்சர்லாந்து நாட்டின் ஐஸ்லாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரோலண்ட் எஸ். 53 வயது இளைஞரான இவர் தனது சைக்கிள் பயணத்தை தமிழகத்தில் மேற்கொண்டுள்ள நிலையில் புதுக்கோட்டைக்கு வந்தார்.
இவர் தனது காலை உணவுக்காக பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓர் உணவகத்துக்கு வந்திருந்தபோது சந்தித்தேன்: அவரது சாகசப்பயணம் குறித்து கூறியதாவது: எனது சாகசத்தின் தொடக்கமாகவும் முடிவாகவும் சுவிஸ் உள்ள பெர்னில் உள்ள Bundesplatz இடத்தை தேர்ந்தெடுத்தேன்.
இந்த தருணம் அவ்வளவு எளிதானது அல்ல என்பதை நான் உணர்ந்தேன். அதே நேரத்தில் இந்த சாகசப் பயணத்தை நான் மிகுந்த மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். பெடரல் பேலஸ் முன்பாக கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் 5 -ஆம் தேதி இருந்து எனது பயணத்தை தொடங்கினேன்.
குடும்பம் மற்றும் நண்பர்கள், நகர மையத்தில் போலீஸார் எனக்கு பிரியா விடை அளித்தனர். பயணத்தின் முதல் நாள் அழகான வானிலையில் என்னை லூசர்னுக்கு அழைத்துச் சென்றது. எதிர்க்காற்று மற்றும் அசாதாரண நிலைப்பாடு எனக்கு சில பிரச்னைகளை ஏற்படுத்தியது. சமாளித்து பயணத்தை தொடர்ந்தேன்.
அங்கிருந்து இங்கிலாந்து, பின்லாந்து,டென்மார்க், நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, லிபியா, சிரியா, சைப்ரஸ் வழியாக இந்தியாவுக்கு வந்தேன். தில்லியிலிருந்து மும்பை, கோவா, கர்நாடகம், கேரளம் வழியாக தமிழகத்தின் கன்னியாகுமரி வந்தேன். அங்கிருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை வழியாக புதுக்கோட்டை வந்திருக்கிறேன். இங்கிருந்து தஞ்சை, திருச்சி வழியாக சென்னை செல்கிறேன்.
இதுவரை 46 நாடுகளில் 25,374 மைல்கள் பயணம் செய்துள்ளேன் 1004 நாள்கள் கடந்து விட்டன. இன்னும் 2 ஆண்டுகளில் எனது சைக்கிள் பயணம் நிறைவு பெறும் என நினைக்கிறேன்.
எனது பயண அனுபவங்களை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் எனது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என புன்னகையுடன் நம்மிடம் இருந்து விடை பெற்றார் 53 வயது இளைஞர் ரோலண்ட் எஸ்.