மைக்கேல் ஜாக்சன் – பாப் உலகின் முடிசூடா மன்னன். நாடுகளை கடந்த கலைஞன், இசையால் இதயங்களை கரைத்தவர். 1958 ஆண்டு ஆகஸ்ட் 29 நாளில் இண்டியானா மாகாணத்தின் கேரி நகரில் பத்து குழந்தைகள் உள்ள அமெரிக்க ஆப்ரிக்க குடும்பத்தில் எட்டாவது பிள்ளையாக பிறந்தார்.
ஒரு கலைஞன் உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல, இறந்தபின்பும் மக்களை மகிழ்விப்பான் என்கிற வரையறைக்கு நல்லதொரு உதாரணம், மைக்கேல் ஜாக்சன்.
1960-களில் வெள்ளையின ஆதிக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு கறுப்பினத் தந்தை, தன் மகன் மீது கொண்டிருக்கும் கண்டிப்பு என்பது, எந்த விதத்திலும் தன் மகன் வெள்ளையின ஆதிக்கத்திற்கு இரையாகிவிடக் கூடாது என்பதால் மிகவும் அதிகமாகவே இருக்கும். ஜாக்ஸனின் தந்தை ஜோஸப்பும் அப்படித்தான். அப்போதிருந்த அனைத்துத் துறைகளிலும் வெள்ளையின ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. இசையில் மட்டும் தான் கறுப்பினர்களால் காலூன்ற முடிந்தது. வாழ்க்கையில் பெரிய அளவில் உயர்ந்ததற்கு காரணம் அவரின் அப்பாவின் கண்டிப்பு தான் என நினைவு கூர்வார்.
இனப்போரால் தங்களை அடிமைப்படுத்தி வந்தவர்களை தனது இசையால் அடிமைப்படுத்தினார். அவர் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக செல்வத்தில் தழைக்கத் தொடங்கியது. `ஜாக்ஸன் 5′ குழுவில் ஒவ்வொரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்கினாலும், கடைக்குட்டி ஜாக்ஸன் மீது தனி கவனம் இருந்து வந்தது. பிறகு, பாப் இசையில் கோலோச்சிய டயானா ராஸ், மைக்கேல் ஜாக்ஸனுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்த, உலகளவில் கவனம் பெறத் தொடங்கினாா்கள் இருவரும். கூடவே இவர்கள் நட்பும் வலுப்பெற்றது.
அமெரிக்காவின் பிரபல குழுவான மொடவுன் ரிக்கார்ட்ஸ் குழுவில் பாட ஜாக்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஏறுமுகம் கொடுத்து வந்த ஜாக்சனை திடீரென இந்தக் குழு கழற்றி விட்டது. ஜாக்சன் சொன்ன புதுமைகளுக்கு அங்கே இடம் இல்லை என்பதே காரணம். பிறகு எபிக் ஸ்டுடியோவிடம் ஒப்பந்தம் செய்து கொண்ட ஜாக்சன், பின்னர் தானே பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்தார்.
புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நகரக்கூடிய காலணி ஒன்றை தானே தயாரித்து, அதற்கு காப்புரிமையும் பெற்றார். அதுதான் ஜாக்சனின் ‘மூன் வாக்’ நடனத்திற்கு உதவியது. இதை அணிந்து கொண்டு முன்பக்கம் சாதாரணமாக வளைவதை விட அதிகமாக வளைய முடிந்தது அவரால். இதனால் தான் ரப்பரை போன்ற வளைக்கிற நடன அசைவுகளை ஜாக்சன் போட முடிந்ததாக சொல்வார்கள்.
மைக்கேல் ஜாக்சனின் வாழ்வு ஓர் இரவிலேயே உச்சம் தொடவில்லை. அவரின் முதல் ஆல்பம் வெளிவந்த பத்து ஆண்டுகள் கழித்து த்ரில்லர் வெளியான பின்பு தான் உலகம் திரும்பி பார்த்தது. 1982 வருடம் வெளிவந்த த்ரில்லர், இன்றைக்கும் உலகில் அதிகமாக விற்கும் இசை ஆல்பம். இதன் மூலம் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் அதிக கவனம் பெற்றார். இசை உலகின் மன்னன் என ஜாக்சனை இதற்கு பின் தான் கொண்டாடத் தொடங்கியது உலகம்.
உலகின் பல முன்னணி பத்திரிக்கையில் முதன் முதல் இடம் பெற்ற முதல் கருப்பர் மைக்கேல் ஜாக்சனே ஆவார். அவர் தன்னை வெள்ளைக்காரனாக மாற்ற சாகும் வரை முயன்று கொண்டிருந்தார், தன் கருப்பு நிறத்தின் மீது அவருக்கு வெறுப்பு இருந்தது என இன்றளவும் ஒரு பேச்சு உண்டு. அவர் மீதான சிறார் பாலியல் குற்றச்சாட்டுக்களைப் போலவே இதுவும் அடிப்படையற்றது. உண்மை என்னவென்றால் மைக்கேல் ஜாக்சன் ‘விட்டிலிகோ’ என்கிற வெண் புள்ளி தோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். வெண்மையை மறைக்க நவீன மருத்துவத்தால் முடியாது என்பதால் மீதமுள்ள தோல் பகுதியையும் வென்மையாக்கும் கடுமையான சிகிச்சை முறைக்கு சென்றார். அதனால் அவரின் வாழ்க்கையே இழக்கும் நிலைக்கு சென்றது தான் உண்மை.
பால்யத்தைத் தொலைத்து, காதலில் தோற்று நீங்கா சர்ச்சைகளில் சிக்கி ஒரு பரமபத ஆட்டத்தில் தன்னைச் சிக்கவைத்துக் கொண்ட மைக்கேல் ஜாக்ஸன், கடின உழைப்பாலும், இசையின் மீது கொண்டிருந்த தீராக் காதலாலும் இன்றும் மக்கள் மனதில் தினசரி இரவுகளில் மூன்வாக் ஆடிக்கொண்டு தான் இருக்கிறாா். மறைந்தாலும் அவரது புகழ் என்றும் மறையாது என்பதே நிதர்சனம்!!
# இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋#