Close
நவம்பர் 21, 2024 9:54 காலை

வெள்ளை மாளிகை இனி யார் கையில்…..

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் மகத்தான பெருவெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்க இருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

கடந்த ஆட்சியில் பங்கேற்றவர்களே இம்முறையும் இவரது அதிகாரத்தை வழி நடத்தும் அதிகாரிகளாக அமெரிக்க அதிகார மையங்களாக திகழப்போகிறார்களா அல்லது வேறு விதமான ஆட்சி அதிகாரத்தை டொனால்ட் ட்ரம்ப் வழங்க இருக்கிறாரா என்பதே இன்றைய மில்லியன் டாலர் கேள்வி.

ஆட்சியாளர்களை பொறுத்த வரையில் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆலோசனை இன்றி அல்லது அவர்களின் அனுபவ பங்களிப்பு இன்றி தங்களுடைய அதிகாரத்தை சரிவர பயன்படுத்திட முடியாது. இதற்கு ஆனானப்பட்ட அமெரிக்க அதிபரும் விதிவிலக்கல்ல.

கடந்த முறை அவரது அதிகார மையங்களாக பெரும்பங்கு வகித்தது அவரது குடும்ப உறுப்பினர் தான். மத்திய கிழக்கு நாடுகளின் அரசியல் அவர் வசம் தான் இருந்தது.

அந்த சமயத்தில் சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானை பொது வெளியில் கடுமையாக விமர்சித்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகிக்கு துருக்கி தூதரக அலுவலகத்தில் வைத்து பரலோக பிராப்தம் கொடுக்கப்பட்டது.

ஆனால் அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து சவூதி இளவரசர் நழுவி வந்தார். அப்படி வந்ததில் ட்ரம்ப்பின் அந்த குடும்ப உறுப்பினரின் பங்கு அளப்பரியது.

மற்றோர் உதாரணமாக ஈரானிய புரட்சி காவலர் படையின் கட்டளை தளபதி க்வஸிம் சுலைமானியை ஆளில்லா உளவு மற்றும் தாக்குதல் விமானமான MQ-9 ரீப்பர் மூலம், 03/01/2020 அன்று ஈராக்கிய பாக்தாத் விமான நிலையத்தில் வைத்தே துல்லியமான தாக்குதல் முறை மூலம் அமெரிக்க CIA கொன்றது அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில் தான். அந்நாளில் மிகப் பெரிய விஷயம் இது.

இது அலுவல் ரீதியாக. ராணுவ நடவடிக்கை ரீதியாக என்றால் ஒசாமா பின் லேடனை வேட்டையாடியதை விட ஐந்து மடங்கு பெரியது. உலகம் ஒரு கணம் மிரண்டு நின்ற சமயம் அது. இதன் பின்னணியில் அலுவல் ரீதியாக ஆலோசனை கொடுத்த விதத்தில் மைக் பாம்மியோ நின்றிருந்தார்.

டொனால்ட் ட்ரம்ப் போன்ற அடாவடி பேர்வழியை ஓர் இரவில் அதிரடி பேர்வழியாக காண்பித்து, அதிரடித்த தருணம் அது.
வெகு நிச்சயமாக அரண்டே போனார்கள் மூன்றாம் உலகப்போருக்கான வித்து என்றெல்லாம் வித்தை காட்டி கொண்டு இருந்தனர் பலரும். இன்றளவும் ஒன்றும் பெயரவில்லை.

ஆக ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்த, வழி நடத்த அதிகாரிகளின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் இந்த முறை யார் யார் எல்லாம், என்னென்ன பதவிகளில் பொறுப்பு ஏற்க இருக்கிறார்கள் என்பதை பொறுத்து அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி எந்த திசையில் பயணிக்கும் என்பதை ஒர் அளவு யூகித்து விடமுடியும்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல், இவர் தற்சமயம் வரை ஒரே ஒருவரை மட்டுமே தேர்வு செய்து அறிவித்திருக்கிறார். அது ஜேடி.வான்ஸ், அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்வு செய்து அறிவிக்கப்பட்டதோடு சரி.

மற்றவர்கள் யார் யார் என்பதெல்லாம் இன்றைய தேதியில் தங்க மலை ரகசியம் என்கிறார்கள். ஆனால் இரண்டு அடுக்கு அதிகார மையங்களாக, இரண்டாவது அடுக்கில் மிக முக்கியமான பதவிகளுக்கு கிட்டத்தட்ட பதினோரு இந்திய வம்சாவளியினர் இடம் பெறக்கூடும் என்கிறார்கள்.

இது நடக்கும் பட்சத்தில் அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக இடம் பெற இருக்கும் மிகப் பெரிய அங்கீகாரம் இது ஆகும். இம்மாத இறுதிக்குள் முடிவு செய்து விடுவார்கள் என்கிறார்கள்.

பலராலும் எதிர்பார்க்கப்பட்ட, கடந்த ஆட்சியில் பங்கேற்ற நிக்கி ஹாலிக்கு இம்முறை இடம் கேள்வி குறி தான் எனும் கூடுதல் தகவலும் உண்டு. மைக் பாம்மியோ கடந்த முறை செக்ரட்டரி ஆஃப் ஸ்டெட்ஸ் என்கிற பதவி வகித்தார். ஒரு வேளை இம்முறை டொனால்ட் ட்ரம்ப் அதிபர் தேர்தலில் போட்டியிடாத நிலை உருவானால் இவரே அமெரிக்க அதிபராக போட்டி இட இருந்தார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிதீவிர வலதுசாரி. வாள்முனையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளை தயவு தாட்சண்யம் இன்றி அணுகியவர். இம்முறை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் செயலர் பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவை பொறுத்தவரையில் அலுவல் ரீதியாக இரண்டாம் இடத்தை பெறும் மிக உயரிய பதவிகளில் ஒன்று.

அடுத்ததாக உள்ளவர் ராபர்ட் ஓ பிரையன். கறார் ஆசாமி. ஆசிய பசிபிக் என்று இருந்ததை இந்தோ-பசிபிக் என்று அறிவிக்க செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர். அமெரிக்க மரைன் பிரிவுகளை பலப்படுத்தி அதனை இந்தோ பசிபிக் பகுதியில் நிலை நிறுத்தும் பணியை சிரம் மேல் கொண்டு நடத்தியவர். சீனர்களை கண்டால் ஆகாது என வெளிப்படையாக அறிவித்தவர் என பன்முகம் கொண்டவராக இருந்தாலும் இவரது செயல்பாடுகளில் ஒரு நேர் கோடு உண்டு என்கிறார்கள்.

மைக்கேல் வால்ஸ் ப்ளோரிடா மாகாணத்து காங்கிரஸ்காரர். சமூக வலைத்தளங்களில் அதிதீவிரமாக இயங்கியவர். தீவிர வலதுசாரி. ஜோபைடன் ஆட்சி காலத்தில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக அவரது சார்பில் அவரின் தூதுவராக இயங்கியவர். வெளியுறவுத்துறை இனி இவர் வசம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக இம்முறை டொனால்ட் ட்ரம்ப் நிதானமாக ஆழமாக இறங்கி செயல்பட முடிவு செய்து இருக்கிறார் என்பது மட்டும் புரிகிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில். அதற்கேற்ப அவர் தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளும் பதவியேற்க இருக்கிறார்கள்.

அதற்கு உதாரணமாக தைவானில் அமெரிக்க நடவடிக்கைகளுக்கு காசு கொடுக்க வேண்டும் என்று சொல்லி பதறடித்திருக்கிறார் ட்ரம்ப். இதன்மூலம் தைவானை காக்க நாங்கள் வர வேண்டிய தேவை ஏற்படாது.  அதனை இந்தோ பசிபிக் பகுதியின் அதிகார வரம்பில் உள்ள இந்தியா இனி பாதுகாக்கும் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

கடந்த அமெரிக்க ஆட்சியாளர்கள் காலத்தில் இஸ்ரேலியர்கள் தாக்கம் அதிகப் படியாக இருந்ததாக வரலாறு உண்டு. ஆனால் இம்முறை முதல் முறையாக இந்தியர்கள் பங்களிப்பு அதிகளவில் இருப்பது போல் தெரிகிறது. இது என்ன மாதிரியான உலக அரசியல் போக்கை நிர்ணயிக்கப் போகிறது என்பதை பலரும் ஆவலுடன் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஏற்கனவே அதிகார கையளிப்பு மிக சுமுகமாக இருக்கும், எவ்விதமான சலசலப்புக்கும் இடம் இருக்காது என ஜோ பைடன் அறிவித்து விட்டு வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்.

அடுத்த அதிரடியாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினோடு நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபட விருப்பம் தெரிவித்து டொனால்ட் ட்ரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட,  புடினோ ஒரு படி முன்னேறி நேரடியாகவே சந்தித்து பேசலாம் என சொல்லி, ஜெலன்ஸ்கி தலையில் கொள்ளி வைத்து இருக்கிறார்.

கூடவே இந்தியாவிற்கு வல்லரசு நாடு என்கிற அங்கீகாரத்தோடு ஐநாவில் நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்.

இத்தனை நாள் இருந்ததை காட்டிலும் படு வேகமாக நம் இந்திய தேசத்திற்கு சாதகமாக காட்சிகள் உலக அரங்கில் மாற தொடங்கி இருக்கிறது. வரவிருக்கும் நூறு நாட்கள், கடந்த நூற்றாண்டை காட்டிலும் படு வேகமாக நம் இந்திய தேசம் வளர்ச்சி கண்டு இருக்கும்.

அப்படியான பாதையில் பயணிக்க ஆரம்பித்து இருக்கும். சுதந்திரம் பெற்ற நூற்றாண்டு விழா நடக்கும் காலத்தில் நிச்சயம் நம் பாரத தேசம் அளப்பரிய சக்தியோடு பெரும் ஆற்றல் வாய்ந்த ஓர் வல்லரசு நாடாக மாறியிருக்கும். அதனை நம் காலத்திலேயே பார்க்க இருக்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top