Close
ஏப்ரல் 2, 2025 2:44 மணி

போர் நிறுத்தம் நிரந்தரமானதா..?

காஸா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்கள் தப்பிப்பிழைத்தவர்களைத் தேடுகின்றனர். (AP Photo/Doaa AlBaz) (பழைய படம்)

மேற்காசிய போரில் இயல்பான திருப்பமாக இஸ்ரேலும் ஹெஸ்புல்லாவும் போர் நிறுத்தம் செய்கின்றது.

இதற்கு மேலும் தாங்கமுடியாது எனும் நிலையிலும் இனி இழக்க ஒன்றுமில்லை எனும் நிலையிலும் ஹெஸ்புல்லா இந்த முடிவுக்கு வந்தாயிற்று. போரில் வலுவான மேன் நிலையில் இருக்கும் இஸ்ரேல் பல நிபந்தனைகளுடன் சம்மதித்திருக்கின்றது.

1980 முதல் இஸ்ரேலை மிரட்டிகொண்டிருந்த இயக்கம் ஹெஸ்புல்லா. 1980ம் ஆண்டுகளில் அமெரிக்க பிரெஞ்சு படைகளையே லெபனானில் இருந்து விரட்டிய இயக்கம் அது. 2006ல் ஹெஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்குமான போர் பிரசித்தியானது. அப்போது முழுக்க அழியாத ஹெஸ்புல்லா போர் நிறுத்தம் செய்து சுதாரித்தது.

அடுத்த 18 ஆண்டுகளில் பெரும் தயாரிப்பில் இறங்கினார்கள். நிலத்தடி சுரங்கம 2 லட்சம் ராக்கெட்டுகள் பல்லாயிரம் சேனைகள் என வலுத்தார்கள். இந்த ஷியா இயக்கம் ஈரானின் உருவாக்கம், ஈரான் எங்கோ தொலைவில் பத்திரமாக இருந்து கொண்டு இவர்களை வைத்து ஆடியது.

ஹமாஸை விட நிச்சயம் 10 மடங்கு பலமான இயக்கம் ஹெஸ்புல்லா. அனுபவமிக்க இயக்கம் அதன் தலைவர் ஹசன் நஸ்ருல்லா, மொசாத்தால் 40 வருடமாக தொடமுடியாத இடத்தில் இருந்தார். அந்த அளவு மிக மிக நுணுக்கமான இயக்கம் அது.

அப்படியான இயக்கம் இஸ்ரேலுக்கு பெரிய தலைவலி தான். இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அது உறங்கும் புலிபோல மிரட்டலாகத்தான் இருந்தது. நேரம் சரியில்லை என்றால் தேவையில்லா சிக்கலில் விழ வேண்டும் என்பார்கள். அது ஹெஸ்புல்லாவுக்கும் பலித்து விட்டது.

கடந்த வருடம் போரை தொடங்கியது ஹமாஸ். இஸ்ரேலை தாக்கி ஆயிரம் பேரை கொன்று 200 பேரை சிறைபிடித்து தொடங்கிய போரில் ஹமாசுக்கு ஆதரவு என வலிய சென்று சிக்கியது ஹெஸ்புல்லா. அதாவது ஒரு புலி பாயும் போது அதன் வாலை பிடித்து இழுத்தது போல சென்றது.

18 வருடம் சரியான வாய்ப்புக்கக காத்திருந்த இஸ்ரேல் சொல்லி சொல்லி அடித்தது, அடி என்றால் அப்படி ஒரு அடி. தெற்கு லெபனானும் காசாவும் நொறுங்கி கிடக்கிறது. இது தங்களால் தான் என இஸ்ரேலும் சொல்லாது. இதோ எங்கள் வெற்றி என இயக்கங்களும் சொல்ல முடியாது. அதனால் அந்த அழிவுகள் வெளியே தெரியவில்லை. ஆனால் நடந்து முடிந்துள்ளது மாபெரும் அழிவு.

இந்த அழிவில் ஹெஸ்புல்லாவின் தலைவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கணக்கான முக்கியஸ்தர்கள் கொல்லப்பட்டார்கள். ஹெஸ்புல்லாவின் நிதி முடக்கப்பட்டது. பல்லாயிரம் போராளிகள் கொல்லப்பட்டு அவர்களின் சுரங்கம் முதல் எல்லாமும் முடக்கப்பட்டது. பேஜர் வரை வெடிக்க வைத்து இஸ்ரேல் ஆடிய ஆட்டத்தில் வெலவெலத்துபோனது ஹெஸ்புல்லா.

அவர்கள் தாங்கள் தாக்கபட்டால் ஈரான் துணைக்கு வரும் என நம்பினார்கள். ஆனால் ஈரான் என்ற பெரியண்ணனே பாதாள பதுங்கு குழியில் கிடக்கும் போது இவர்கள் நிலைமை என்ன என யோசித்து பாருங்கள்.

இதனால் வலிய போருக்கு போய் எல்லாவற்றையும் இழந்து சமாதானத்துக்கு வருகின்றது ஹெஸ்புல்லா. ஆனால் இந்த சமாதானம் நிற்குமா என்றால் அதற்கான பதில், கேள்விகுறியாகவே இருக்கிறது.

ஜோ பிடன் தான் அதிபர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் முன் ஒரு சாதனை செய்ய வேண்டும். நல்ல பெயருடன் செல்ல வேண்டும் என விரும்புகின்றார். இதனால் அவர் அறிவித்திருக்கும் அறிவிப்பு தான் இந்த போர் நிறுத்தம்.

ஜனவரி 20ல் டிரம்ப் வந்த பின் இந்த யுத்தத்தை இஸ்ரேல் மீண்டும் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளது. காரணம் இஸ்ரேல் என்பது அடங்காத குதிரை.

இனி லெபனானின் தென்பக்கம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் தான் வரும். காசா முழுக்க இஸ்ரேலிய ஆதிக்கம் என காட்சிகள் சில காலம் தொடரும். அல்லது அதுவே இனி அங்கு நிரந்தரமாகவும் இருக்க கூடும்.

இத்தனை இழப்புகளுக்கும் காரணமான ஈரான் சத்தமே இல்லாமல் முடக்கி கிடக்கின்றது, இஸ்ரேல் எப்படியான தேசம் என இப்போது ஈரான் உணர்ந்திருக்க கூடும். விஷயம் என்னவென்றால் ஈரானிடம் எந்த வான்பாதுகாப்பு பலமும் இல்லை. இஸ்ரேல் நினைத்தால் இப்போது கூட ஈரான் மீது தாண்டவம் ஆடலாம்.

ஆனால் ஏதோ காரணத்துக்காக இஸ்ரேலியர்கள் காத்திருக்கின்றார்கள். இது ஈரானுக்கும் தெரியும் என்பதால் அமைதியாகி விட்டார்கள். இது தற்காலிக போர் நிறுத்தமாகவே இருக்கலாம்.

ஆனால் இப்போதைய நிலையில், இஸ்ரேலுக்கு இனி அரேபியாவில் சமமான எதிரிகள் இல்லை, இஸ்ரேலியர்களை மிரட்டும் சக்தி சுற்றி உள்ள நாடுகளுக்கு இல்லை என்பதையே இந்த போரின் முடிவுகள் காட்டுகின்றது.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். இஸ்ரேல் எனும் குட்டி நாடே ஈரான் போன்ற முரட்டு தேசங்களை அடக்க முடிகின்றது. அடித்து துவைத்துப்போட முடிகிறது என்றால் இந்தியா எனும் மாபெரும் தேசம் பாகிஸ்தானை என்றோ பந்தாடி மூலையில் வைத்திருக்கலாம்.

இப்போது மோடி ஆட்சியில் போரே நடக்காமல், பாகிஸ்தான் திவாலாகி கிடக்கின்றது. இதையும் மோடி தான் செய்தார், இஸ்ரேல் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் விட இந்தியாவின் நடவடிக்கைகள் பல மடங்கு துல்லியம் வாய்ந்தது. இஸ்ரேலிய நுட்பங்களை விட இந்தியாவின் நுட்பங்கள் சிறந்தது.

திறமை வாய்ந்தது. இதனை உக்ரைன் போர் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஆனானப்பட்ட ரஷ்யாவை இந்தியாவை சார்ந்து இருக்க வேண்டிய நிலை வந்து விட்டது. காலங்கள் மாறிக் கொண்டே தான் இருக்கும். இப்போது உருவாகியிருப்பது தர்மத்தின் காலம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top