சிரிய நாட்டு அரசை எதிர்த்து அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வந்த இஸ்லாமிய கிளர்ச்சிப் படையினர் டமாஸ்கஸ் நகரை கைப்பற்றி விட்டதாக அறிவித்துள்ளனர். மேலும் நாட்டின் அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் அறிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல்- ஆசாத் ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளுடன் கூட்டாக செயல்படுவதால் அவரது அரசை கவிழ்க்க அமெரிக்காவுடன் சில மேற்கத்திய நாடுகளும், துருக்கியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதற்காக பயங்கரவாதிகளை தூண்டிவிடுவது மற்றும் ஆயுதங்களைக் கொடுத்து உள்நாட்டில் கலவரங்களை ஏற்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்து வந்தனர்.
இதனால் சிரியாவில் 2015ம் ஆண்டில் நடத்தப்பட்ட தீவிரமான போரில் அதிபர் ஆசாத்தின் ஆட்சிக்கு முடிவு கட்டிவிடும் நிலை ஏற்பட்டது. இதற்கிடையே சிரியாவுக்கு உதவ ரஷ்ய ராணுவம் நேரடியாக களம் இறங்கியது. ரஷ்யாவின் முப்படைகளும் சிரிய கிளர்ச்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கின. அதை சமாளிக்க முடியாமல் கிளர்ச்சிப் படையினர் ஓட்டம் பிடித்தனர். இதனால் அதிபரை ஆட்சியில் இருந்து அகற்றும் அமெரிக்காவின் முயற்சி தோல்வியுற்றது.
தற்போது கிளர்ச்சிப் படைகளின் ஒரு பிரிவு டமாஸ்கஸ் நகரை கைப்பற்றி விட்டதாகவும் அறிவித்துள்ளது. சிரியாவின் அரசுப் படைகளுக்கு ஆதரவாக ஈரான், ஹிஸ்புல்லா படைகள் வருமா அல்லது ரஷ்யப் படைகள் வருமா என்ற குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
ஆனால் உக்ரைன் நாட்டுக்கு எதிரான போரில் ரஷ்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஈரானும் இஸ்ரேல் உடனான மோதல் காரணமாக, படைகளை அனுப்ப முடியாத சூழலில் உள்ளது. சிரிய அதிபருக்கு ஆதரவாக போரிட்டு வந்த ஹிஸ்புல்லா படைகளும் இஸ்ரேல் தாக்குதலில் நிலைகுலைந்து பாதிப்பை சந்தித்துள்ளனர்.
இந்த சிக்கலான சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக்கொண்டு அதிபர் ஆசாத்துக்கு எதிராக புதிதாக உருவான கிளர்ச்சிப்படை துருக்கி ராணுவத்தின் உதவியோடு தீவிர தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதில் சிரியாவின் முக்கிய நகரங்களான அலப்பே, ஹோம்ஸ் ஆகியவை அடுத்தடுத்த நாட்களில் கிளர்ச்சிப்படை கை வசமாகிவிட்டன. இந்த நகரங்களை பாதுகாத்து வந்த சிரிய அரசுப் படையினர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் கிளர்ச்சிப் படையினர் சிரியா தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றி உள்ளனர். உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான டமாஸ்கஸ், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள், யூதர்கள் ஆகியோரும் ஒன்றாக வசித்த நகரம். ஏராளமான புராதான சின்னங்களைக் கொண்டுள்ள நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.