அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவின் கிலாவியா எரிமலை கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது. எந்த நேரம் வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான ஹவாய் தீவு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளது. அமெரிக்காவில் இருந்து தென்மேற்கே 2000 மைல் தொலைவுக்கு கூடுதலான தூரத்தில் ஹவாய் தீவு அமைந்துள்ளது. அந்த தீவு, எரிமலைக்கு பேர்வாங்கிய தீவாகும். இந்த தீவுக்கு சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்வார்கள். இந்த தீவில் உள்ள 5 பெரிய எரிமலைகளில் கிலாவியாவும் ஒன்றாகும்.
இந்த கிலாவியா எரிமலையில் இருந்து 1983ம் ஆண்டு முதல் எரிமலைக்குழம்பு தொடர்ச்சியாக வெளியேறி வருகிறது. இந்த எரிமலை சுமார் 4 ஆயிரம் அடி உயரம் கொண்டது என்றும் தெரிகிறது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அந்த எரிமலை வெடித்துச் சிதறியது. அந்த எரிமலைக் குழம்பில் 700 வீடுகள், சுற்றுலா மையங்கள், சாலைகள் என பெருத்த சேதமடைந்தன. பின்னர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் வெடித்துச் சிதறியது. அப்போதும் பெருத்த சேதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் கிலாவியா எரிமலை கொதிக்கத் துவங்கி உள்ளது. அந்த எரிமலை எந்த் நேரத்திலும் வெடித்துச் சிதறி தீப்பிழம்புகளை வெளியேற்றும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதனால் எரிமலையைச் சுற்றி உள்ள வீடுகள் போன்றவை பாதிக்கப்படலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த கிலாவியா எரிமலை ஆண்டு முழுவதும் கொதித்துக் கொண்டே இருக்கும் எரிமலையாகும். கடந்த 200 ஆண்டுகளாகவே அவ்வப்போது தொடர்ந்து வெடித்து தீக்கங்குகளை வெளியேற்றி வருகிறது. ஹவாய் எரிமலை ஆய்வகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தொடர்ந்து இதை ஆய்வு செய்து வருகின்றனர்.