Close
ஜனவரி 9, 2025 6:27 காலை

அமெரிக்க புத்தாண்டு கொண்டாட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு..?! தீவிர விசாரணை..!

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் விசாணை மேற்கொண்டுள்ள புலனாய்வுத்துறையினர்

அமெரிக்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் நடந்தபோது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கொடி பறந்ததாகக் கூறப்படுவதால் பதற்றம் நீடித்து வருகிறது.

அமெரிக்காவின் லூசியானா மாகாண, நியூ ஆர்லியன்ஸ், போர்பன் சாலையில் பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியோடு ஈடுபட்டிருந்தனர். இசை நிகழ்ச்சிகளிலும் விளையாட்டுகளிலும் சுற்றுலாப் பயணிகள் ஜாலியாக ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 3.15 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் திடீரென்று பிக்அப் டிரக் ஒன்று வேகமாக புகுந்தது.

ஷம்சுதீன்

இதில், பொதுமக்கள் பலரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது, பிக் அப் டிரக்கை ஒட்டி வந்த டிரைவர் கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் பட..படவென சுடத் தொடங்கினான். துப்பாக்கி சத்தம் எழுந்ததும் அப்பகுதியே அலறல் சத்தங்கள் எதிரொலிக்க அந்த இடமே கதிகலங்கிப் போனது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட காவல்துறையினர் திருப்பிச் சுட்டனர். இதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டான்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பிக் அப் டிரக்கில் ஐஸ் பெட்டியில் பல வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. தாக்குதல் சம்பவத்தின்போது பிக் அப் டிரக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி பறக்கவிடப்பட்டு இருந்ததாகவும், பிக்அப் வாகனம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது ஒரு திட்டமிட்ட தீவிரவாதத் தாக்குதல் என்று நியூ ஆர்லியன்ஸ் மேயர் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இந்த தீவிரவாத த் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர் ஷம்சுதீன் என்பதும், இவர் 13 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியிருப்பதும் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்துவதற்கு முன் ஷம்சுதீன் பதிவு செய்திருந்த வீடியோக்களைப் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதில், ஷம்சுதீன் தனது விவாகரத்து குறித்துப் பதிவு செய்துள்ளார். முதலில் தனது குடும்பத்தினரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் இணைந்ததாகவும் ஷம்சுதீன் அதில் கூறியுள்ளார்.

அந்த விடீயோவின் ஆதார அடிப்படையில் ஷம்சுதீனின் தீவிரவாத இயக்கத் தொடர்புகள் குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், தாக்குதல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top