Close
ஜனவரி 6, 2025 4:24 காலை

மீண்டும் சீன வைரஸ்! சுகாதாரத்துறை அலர்ட்

சீனாவில் வேகமாகப் பரவும் மெடாநியூமோ வைரஸ் காரணமாக மீண்டும் சுகாதாரத்துறை அலர்ட் செய்யப்பட்டுள்ளது.

சீனத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்எம்பிவி அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

நுரையீரல் தொற்று பாதிப்புடன் மருத்துவமனைகளில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வருவதாகவும் சீனாவின் பல மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை, உலக சுகாதார அமைப்பு (WHO) அதன் தரப்பில் எந்த குறிப்பிட்ட அறிக்கை/விளக்கத்தையும் கொடுக்கவில்லை. எவ்வாறாயினும், சீனாவின் வடக்குப் பகுதிகளில் எச்எம்பிவி பரவுவதை சீன சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகக் கூறப்படும் செய்திகள் உள்ளன

எச்எம்பிவி எனப்படும் ஹியூமன் மெடாநியூமோவைரஸ் பாதிப்பே இந்த நிலைக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், இதுவரை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையாலோ அல்லது உலக சுகாதார அமைப்பாலோ அறிவிக்கப்படவில்லை.

பொதுவாகவே குளிர்காலங்களில் மூச்சு மற்றும் சளி தொந்தரவுகள் அதிகரிக்கும் என்பதால், அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிவது குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது என்ன ஹியூமன் மெடாநியூமோவைரஸ்?

இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்னவோ 2001ஆம் ஆண்டு. இது பாதித்தால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு மூச்சு விடுவதில் பாதிப்பு ஏற்படும். இதன் அறிகுறிகளாக சாதாரண சளி மற்றும் காய்ச்சல்கள் இருக்கும்.

யாருக்கெல்லாம் தொற்றும்?

இந்த வைரஸ் எல்லாரையுமே பாதிக்கும் அபாயம் உள்ளது. ஆனால், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைத் தாக்கினால் பாதிப்பு அதிகமாக இருக்கும். அதுபோல முதியவர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். அது இல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள், ஏற்கனவே ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு ஆபத்தானது.

அறிகுறிகள் என்னென்ன?

காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். எப்படி பரவும்?

கொரோனா போலவே இருமல், தும்மல் மூலம் பரவலாம். அவர்கள் மூக்கு, வாயைத் தொட்டுவிட்டு வேறு எங்காவது அவர்களது கையை வைத்து, அந்த இடத்தை மற்றவர் தொட்டால் வைரஸ் பரவலாம்.

பாதித்தால் என்ன செய்ய வேண்டும்?

தண்ணீர் அதிகம் குடித்து ஓய்வாக இருப்பது, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

சீனாவில் பரவும் HMPV வைரஸ் தொற்று குறித்து இந்தியர்கள் அச்சப்பட தேவையில்லை என பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது

இது சாதாரண காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்தான். இந்தியாவில் இதுவரை யாருக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது

HMPV க்கு குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை, எனவே அதன் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பு முக்கியமானது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top