ஆஸ்திரேலியா முழுவதும் ஜனவரி மாதம் தமிழர் பாரம்பரிய மாதமாகக் கொண்டாடப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்தது.
அதன்படி ஜனவரி முதல் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இது குறித்து ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘தைப்பொங்கல் வருவதால் உலகத் தமிழர்களுக்கு ஜனவரி முக்கிய மாதமாகும். பாரம்பரிய 4 நாள் அறுவடைத் திருநாளில் சூரியன்,நிலம், மழை மற்றும் விவசாயம் பெருமைப்படுத்தப்படுகிறது.
ஜனவரியில் கொண்டாடப்படும் தமிழர்களின் இந்த பாரம்பரிய விழா 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இளைய தலைமுறையினர் தங்கள் வேர்களுடன் இணைய வாய்ப்பு தரப்படுகிறது.
கலை, தத்துவம் மற்றும் மொழி ஆகியவற்றில் தமிழர்கள் பரந்த அளவில் பங்களிப்பு பாராட்டுக்குரியது. திருக்குறள் போன்ற பழமையான படைப்புகள் நெறிமுறைகள், ஆளுகை, மனித விழுமியங்கள் மூலம் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.
வணிகம், கல்வி மற்றும் அரசுப் பணியில் இருக்கும் ஆஸ்திரேலிய தமிழர்களின் பங்களிப்பே இதற்குச் சான்று. இது தமிழ் சமுதாயத்தினரின் மத்தியில் பெருமையை வளர்த்தெடுக்கிறது
தமிழ் பாரம்பரிய மாதத்தின் மூலம் பொங்கலுக்கு உள்ளூர் வணிகம், மளிகைக் கடைகள், உணவகங்கள், துணிக்கடைகளில் வியாபாரம் பெருகும். தமிழ் கலாச்சார திருவிழாக்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது’’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் கலாசாரம், பண்பாட்டை உலகுக்கு வெளிப்படுத்துகிறது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகளும், குறிப்பாக சீனா உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் பண்டிகை மாதங்களை பட்டியலிட்டு கொண்டாடி வருகின்றன.