அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை ஜனவரி 20ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சில மாற்றங்களை டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இதுபற்றி அவர் ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக பதிவில் வெளியிட்ட செய்தியில், நம்முடைய மக்களை நாம் பாதுகாக்க வேண்டும். அது பதவியேற்கும் முன்பு கூட என தெரிவித்துள்ள அவர், வாஷிங்டன் டி.சி.க்கான வானிலை முன்னறிவிப்பானது, கடுமையான குளிரான சூழலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால், வெப்பநிலை கடுமையாக குறைய கூடும். எந்த வகையிலும் மக்கள் புண்படவோ, துன்புறுத்தலுக்கு ஆளாகவோ நான் விரும்பவில்லை. போலீசார், முன்கள பணியாளர்கள் மற்றும் குதிரைகளுக்கு கூட அபாய சூழ்நிலையாக இருக்கும் என தெரிவித்து உள்ளார்.
இதனால், டிரம்ப்பின் பதவியேற்பு நிகழ்ச்சி அமெரிக்காவின் கேபிட்டால் கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் நடைபெறும் என தெரிகிறது. எனினும், அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு விழாவானது வரலாற்று சிறப்புமிக்க மற்றும் நினைவுகூரத்தக்க ஒன்றாக இருக்கும் என டிரம்ப் தெரிவித்து உள்ளார்.