பிறப்புரிமையால் இனி குடியுரிமை இல்லை என ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளதால் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியவந்துள்ளது.
பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டிருப்பது, அந்நாட்டில் வசிக்கும் இந்தியா உள்பட பல வெளிநாட்டவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் யாரேனும் ஒருவர் நிரந்தர அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்தால் மட்டுமே அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும் என அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு 30 நாட்களில் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த உத்தரவு, அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிப்பதாகவும், இந்த முடிவு அமெரிக்காவில் தற்காலிக விசாக்களில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களை பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், ட்ரம்ப்பின் இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்ட சில மணி நேரங்களில், நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் 54 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இது அமெரிக்க மக்கள் தொகையில் தோராயமாக 1.47% ஆகும். குடியுரிமை பெற்ற இந்தியர்களில் 34% பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள்.
ட்ரம்பின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்காலிக வேலை விசாக்கள் அல்லது சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இனி, இயல்பாக குடியுரிமை பெற மாட்டார்கள்.
அமெரிக்க குடியுரிமைக்காகவே பலர் சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்வது அதிகம் என கூறப்படுகிறது. குறிப்பாக, மெக்சிகோ நாட்டவர்களும் இந்தியர்களுமே அதிக அளவில் இவ்வாறு சுற்றுலா விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து குழந்தை பெற்றுக்கொள்வதாகக் கூறப்படுகிறது.