Close
ஜனவரி 30, 2025 7:12 மணி

டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அதிபரானது இந்தியாவிற்கு சாதகமா? பாதகமா?

டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்று கிட்டத்தட்ட 78 உத்தரவுகளை போட்டிருக்கார். அது சபையின் ஒப்புதல் இல்லாதது. அதில் அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையை தொடுகிறதா என்றால் அதை கோர்டில் வழக்கு தொடர்ந்து தடுக்க முடியும்.

ஆனால் அதையும் சட்டமாக இயற்றி அதை அமல்படுத்த முடியும். சில முக்கியமான முடிவுகளை நாம் கவனித்தால் அவர்களின் யுக்தி என்ன என்பதை கொஞ்சம் யூகிக்கலாம்…

வந்தவுடனே கனடாவிற்கும், மெக்சிகோவிற்கும் 25% வரியை விதித்த ட்ரம்ப், சீனாவை பரம எதிரியாக பார்த்தவர் அதன் மீது 10% வரியை கூட மிகவும் யோசித்த பின்பே போட்டுள்ளார். சீனாவின் மீது 10%  மட்டும் விதிக்க ஆலோசிக்கிறார்களே ஏன்?

காரணம் அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை மட்டுமல்ல, வாங்குகிற பொருட்களுக்கான மாற்று என்பது அதில் முக்கியம். அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை என்பது,

கனடா – 67 பில்லியன், மெக்ஸிகோ – 152 பில்லியன், சீனா – 279 பில்லியன், இந்தியா – 43 பில்லியன், அப்படியென்றால் சீனா மீது தானே அவர்கள் சொன்னது போல அதிக வரி (60%) போட வேண்டும்?

ஆனால் சீனாவிடம் இருந்து வரும் பல பொருட்களை தடை செய்ய நினைத்தால், அமெரிக்காவில் விலைவாசி கடுமையாக உயரும். ஏற்கனவே மோசமான பண வீக்கத்தில் இருக்கும் அமெரிக்கர்களை, மேலும் பெரியளவில் பாதிக்கும்.

சீனாவிடம் இருந்து வாங்குபவை மிகவும் அத்தியவசியமானவை, அவற்றை அமெரிக்காவின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு வேறெந்த நாட்டிலும் இருந்து இவ்வளவு குறைந்த விலைக்கு வாங்க முடியாது.

அதே சமயம், கனடா, மெக்சிகோவில் இருந்து வரும் பொருட்களை வேறு நாட்டிலிருந்து வாங்க முடியும். அவர்கள் அமெரிக்காவை பகைத்துக்கொண்டு வாழ்வது எளிதல்ல என்பதால், இதை அவர்களை மிரட்டி பணிய வைக்க முடியும் என்பதால் அவர்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதை சீனாவிடம் செய்ய முடியாது, அப்படி செய்தால் எலக்ட்ரானிக்ஸ் உட்பட பல விஷயங்கள் பெரியளவில் விலையேறும். அதுமட்டுமல்ல, சீனா அமெரிக்காவின் பத்திரங்களில், ரியல் எஸ்டேட்டில்  மிக அதிக பணத்தை முதலீடு செய்துள்ளது. அதை சீனா வெளியே எடுத்தால், அமெரிக்க நாணயத்துக்கு மதிப்பில்லாமல் போய்விடும் என்பதால் அமெரிக்கா சீனாவிடம் பம்முகிறது.

சீனாவை எதிரியாக பார்ப்பதாக சொன்ன டிரம்ப் தற்போது, இரண்டு நாடுகளும் சேர்ந்து ஒருமித்த அளவில் வர்த்தகம் செய்தால் உலகை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம் என்கிறார். அதே சமயம் சீனாவிற்கும், அமெரிக்காவின் தேவை மிக அதிகம். சீனாவின் பொருளாதாரம் மோசமான நிலையை நோக்கி நகர்கிறது, அதை சரி செய்ய அமெரிக்கா மிக அவசியம்.

இந்தியாவின் பக்கம் அமெரிக்கா சாய்ந்தால், சீனாவின் நிலை மேலும் மோசமாகி விடும். அதே சமயம், சீனாவை ஓரளவிற்கு தம் வசதிக்கு ஏற்ப இழுக்க அமெரிக்காவால் முடியும். ஆனால் இந்தியாவை தன் இஷ்டத்திற்கு வளைக்க முடியாது. மேலும் இந்தியாவின் ஆதிக்கம், ஆப்ரிக்காவில் அதிகரிக்கிறது, அது அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளுக்கும் பிரச்சினை.

அதை விட மேலாக, இந்தியா அமெரிக்காவின் வாழ்வாதாரத்தின் குரல் வலையான ஆயுதம் மற்றும் மருந்து தயாரிப்பு துறையில் பலமாக கால் பதித்து விட்டது. அதில் இந்தியா பெரிய வெற்றி பெற்று விட்டால், அமெரிக்காவின் எதிர்காலம், கேள்விக்குறியாகிவிடும்.

மேலும் இந்தியா, ரஷ்யாவை அவ்வளவு எளிதில் விட்டுத்தராது, ஆனால் சீனா தனது தேவைக்குரியது கிடைத்தால் எதையும் செய்யத் தயங்காது.

சீனாவுடன் சமாதானமாக, உனக்கும் வெற்றி, எனக்கும் வெற்றி என்ற ஒரு முயற்சியை அமெரிக்கா முதலில் எடுக்கும், சாதகமானல் தொடரும், இல்லாவிட்டால் இந்தியா இருக்கிறது என்பது அமெரிக்காவின் நம்பிக்கை.

முக்கியமாக அமெரிக்காவின் பயம் பிரிக்ஸ் கரன்சி மீதுதான். அதில் இந்தியாவை சமாளிப்பதை விட, சீனாவை சரிகட்ட முடியும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. எனவே நாம் நினைத்ததை போலல்லாமல், சீனாவை விட்டுக்கொடுக்காமல் ஒரு முயற்சி நடக்கலாம். அது ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு முன்னேற்றம் கண்டால், சீனா மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டும் என்பது அதற்கான அறிகுறி.

அடுத்து குடியேற்ற உரிமை பெற்றுக்கொள்ளும்  சில விஷயங்கள் பரிசீலிக்கப்படுகிறது. அதன் படி சட்ட விரோதமாக குடியேறிவர்களுக்கு 14 விதியின்படி, அவர்கள் அமெரிக்காவில் குழந்தை பெற்றால் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை உண்டு, அதை இப்போது நீக்குகிறார்கள்.

அதே சமயம் H1B போல தற்காலிகமாக செல்பவர்களுக்கும் அது பொருந்தும் என்பதால், இந்தியர்கள் பெருமளவில் பாதிக்கப்படலாம். நிரந்தர குடியுரிமை என்ற  நீண்டகால விசாவான கிரீன் கார்டு வாங்கியவர்கள் குழந்தைகளுக்கு குடியுரிமை கிடைக்கும். ஆனால் அந்த கிரீன் கார்டு வாங்க தற்போதைய நிலையில் 21 வருடம் ஆகும் என்பதால் அது சாத்தியம் குறைவானது என்பதால் அவர்கள் இந்தியராகவே திரும்பி வரவேண்டும்.

அதனால் இந்தியாவிற்கு பாதகத்தை விட சாதகம் அதிகம். அவர்கள் இப்போது அவர்கள் வாங்குகிற சம்பளத்தை இந்தியாவில் முதலீடு செய்வதும், அவர்கள் நல்ல அனுபவத்துடன் இந்தியா திரும்பி வர வாய்ப்புகள் கூடுவதால், நமக்கும் நல்லதே. பணம், திறமை இரண்டும் இந்தியாவிற்கு திரும்பும்.

ஒரு வேளை டிரம்ப் இந்த கிடுக்குப்பிடி போடாவிட்டால் இந்தியர்கள் அமெரிக்காவில் வீடு வாங்கி முதலீடு செய்வார்கள். திறமையும் அங்கு தான் போகும். அது அமெரிக்காவிற்கு தான் லாபமாக இருக்கும்.

இது அமெரிக்காவில் மட்டுமல்ல, கனடாவில் ஒருவர் கர்ப்பிணியாக கனடா சென்று அங்கே குழந்தை பெற்றால், அது கனடா குடியுரிமையை அந்த குழந்தை பெற்று விடும். அதனால் பலர் 7, 8 மாத மாத கர்ப்பிணியாக கனடா சென்று அங்கே குழந்தை பெற்றுக்கொள்வது நிறைய நடக்கிறது. எனவே அமெரிக்காவின் இந்த மாற்றம் அங்கும் வரலாம்.

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதில் மெக்சிகோ மட்டுமல்ல, கனடாவில் படிக்க போன 20,000 இந்திய மாணவர்களை காணவில்லை என்கிறது புள்ளிவிபரம். அவர்கள் எல்லாம் அமெரிக்காவில் இருக்கவே வாய்ப்புகள் அதிகம்.

வாஷிங்டன், ஓரிகன் போன்ற கனடா எல்ல அருகில் இருக்கும் மாநிலங்களில் சட்டத்துக்கு புறம்பாக குடியேறி, விவசாயம் செய்யும் பல சீக்கியர்கள் அங்கே இருக்கிறார்கள்.

மேற்சொன்ன இரு நாட்டில் இருந்தும் அதிக போதைப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் வருகிறது. அதுபோன்ற விஷயங்களை நிறுத்தவும், மற்ற வகைகளில் ஆதாயம் பார்க்கவும் அமெரிக்கா பிளாக்மெய்ல் மூலம் முயலும்.

அது சரிதானே என்று கேட்டால் 99% பேர் ஆமாம் என்பார்கள். ஆனால் 6 கோடி பேர் வரையில் பங்களாதேஷில் இருந்து இங்கே அதாவது இந்தியாவில் வந்து குடியேறி இருக்கிறார்கள் என்றால், அது மனிதாபிமானம் என்பார்கள்.

ஏன் ட்ரம்ப் தன் நெருங்கிய நண்பரான மோடியை பதவி ஏற்க அழைக்கவில்லை?

மேற்சொன்ன காரணங்களுடன், இந்திய பிரதமர் சமீபத்தில் அமெரிக்க தேர்தலின் போது அமெரிக்கா சென்றார். அப்போது மோடியை சந்திப்பதாக டிரம்ப் ஓபனாக சொன்னார். ஆனால் தேர்தல் சமயத்தில் அதை செய்து, அவர் தோற்று விட்டால், அது இந்தியாவிக்ரு பாதகமாக முடியலாம் என்பதால் மோடி பார்ப்பதை தவிர்த்து விட்டார்.

அதுமட்டுமல்ல எந்த பெரிய நாட்டின் பிரதமரும், இன்னொரு நாட்டின் பதவி ஏற்பில் கலந்து கொண்டால் அது கௌரவக் குறைச்சல் என்பதால் மோடி வரமாட்டார் என்பது தெரியும். ஆனால் சீனாவின் மோசமான நிலை மூலம் அவர் வந்தால், அதன் மூலம் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்து பிரிக்ஸ் நாணயத்தை நிறுத்த அமெரிக்கா முயலும்..

சீனா அமெரிக்காவை பகைத்துக்கொள்ள முடியாத நிலை, ரஷ்யாவை விட்டுக்கொடுக்கும் குறுகிய நோக்கம் என்பது இந்தியாவுடன் ரஷ்யாவை நெருக்கமாக்கும். ஆனால் உக்ரைன் போர் நிறுத்தம், அமெரிக்க, ஐரோப்பிய உள்குத்து என்று எல்லாம் சேர்ந்து போரை நிறுத்தி விட்டால், அமெரிக்க- ரஷ்ய பகை வெகுவாக குறையும். அதில்  இந்தியாவின் பங்கு பெருமளவில் இருந்தால், சீனாவிற்கு சிக்கல்.

இதுவெல்லாம் செஸ் ஆட்டம் போல நகர்வுகள், அதில் இந்தியாவின் வெற்றி தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. ஆனால் ட்ரம்பிடம் தோன்றியுள்ள இந்த மாற்றம், இன்னும் டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவின் ஆதிக்கம் இருப்பதை மட்டுமல்ல நல்ல ஆலோசகர்கள் அவர் அருகில் இருப்பதை உணரலாம்.

அதே சமயம் ட்ரம்பின் தடாலடி இல்லாமல் ஜாக்கிரதையான இந்த மூவ் அமெரிக்காவிற்கு நல்லது என்பது இப்போதைய நிலை. எனவே அது தொடர வாய்ப்புண்டு. ஆனால் நிலைக்க வாய்ப்பில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top