Close
பிப்ரவரி 22, 2025 7:33 காலை

அமெரிக்க அதிபரை வறுத்தெடுத்த மெக்சிகோ அதிபர்..!

மெக்சிகோ அதிபர் கிளாடியா

அமெரிக்கா உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நாடாக மாறி விடும் என டிம்பினை மெக்சிகோநாட்டு அதிபர் கிளாடியா வறுத்தெடுத்து விட்டார்.

அமெரிக்க அதிபராக மாறிய பின்னரும் டொனால்ட் டிரம்ப் தனது தொழிலதிபர் பாணியில் இருந்து மாறவில்லை. அமெரிக்காவை தனது ஒரு தொழிற்சாலை போன்றும், அந்த தொழிற்சாலைக்கு தான் மட்டுமே முதலாளி என்பது போன்றும் நடந்து கொள்கிறார். டிரம்பின் இந்த செயல்களால் பல உலக நாடுகள் அவருக்கு எதிராக திரும்பி வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளே அதிபர் டிரம்புக்கு எதிராக கிளம்பி உள்ளன.

இந்த நிலையில் மெக்சிகோநாட்டு அதிபர் கிளாடியா டொனால்ட் டிரம்பினை வறுத்தெடுத்தது ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவர் கூறியதாவது:

டிரம்பினை அதிபராக தேர்ந்தெடுத்துள்ள அமெரிக்க மக்களே கேளுங்கள்….

அமெரிக்கா, தன் அண்டை நாடான மெக்சிகோவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. மெக்சிகோ நாட்டுப் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரி விதித்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் மெக்சிகோவில் இருந்து தான் அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்தப்படுகிறது என்றும் அபாண்டமாக டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

“என் சக அமெரிக்கர்களே, நீங்கள் உங்களைச் சுற்றி சுவர் கட்ட வாக்கு அளித்து உள்ளீர்கள். உங்களுக்குப் புவி இயல் பற்றிய புரிதல் இல்லை. அமெரிக்கா ஒரு நாடு தான். அது கண்டம் அல்ல. உங்களுக்கு வெளியே 700 கோடி மக்கள் உள்ளனர். உங்களுக்கு மக்கள் என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாது.

அதனால், உங்களுக்குப் புரியும் படி, மக்களை நான் நுகர்வோர் என்று குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். அதாவது, உங்கள் பொருட்களை வாங்கும் திறன் படைத்த 700 கோடி நுகர்வோர் இந்த உலகில் உள்ளனர்.

அவர்கள், ஐ போனுக்குப் பதிலாக சாம்சங்குக்கு 42 மணி நேரத்துக்குள் மாறலாம். ஹூவாய்க்கும் மாறலாம். லீவீஸ் ஜீன்சுக்கு பதிலாக ஷாராவுக்கு மாறுவோம். 6 மாதத்துக்குள் போர்டு, செவ்ரலெட் கார்களில் இருந்து கியா, டொயாட்டா, வால்வோ, பி.எம்.டபிள்யூவுக்கு மாறலாம்.

உங்கள் கார்களை விட இந்தக் கார்கள் தொழில் நுட்பத்திறனில் உயர்ந்தவை. உங்கள் ஹாலிவுட் படங்களைப் பார்ப்பதை நிறுத்தி விட்டு, அதை விட தரம் மிகுந்த லத்தீன் அமெரிக்கப் படங்களைப் பார்க்க தொடங்கலாம்.

நீங்கள் நம்பினாலும் நம்பா விட்டாலும் மெக்சிகோவில் கூட மெக்டோனால்டை விட சிறந்த பர்கர்கள் தயாரிக்கப்படுகின்றன. மெக்டொனால்டை விட சிறந்த நியூட்ரிசன்கள் கொண்ட பர்கர்கள் இவை.

உங்கள் நாட்டில் பிரமிடு உள்ளதா? எகிப்து, மெக்சிகோ, கௌதமாலா, பெரு, சூடான் போன்ற நாடுகளில் பிரமிடுகள் உள்ளன. இவை, எங்களது கலாச்சாரத்தை எடுத்து காட்டுபவை. உலகின் பழங்கால அதிசயங்களில் ஒன்றாவது அமெரிக்காவில் உள்ளதா?

இது எவ்வளவு அவமானகரமானது என்பது டிரம்புக்கு புரியுமா? நாங்கள் நைக் மட்டும் தான் வாங்க வேண்டுமா? அடிடாஸ் உள்ளதே. டென்னிஸ் ஷூ வாங்க மெக்சிகோவின் பனமா இருக்கிறது.

இந்த 700 கோடி நுகர்வோரும் உங்கள் பொருட்களை வாங்கவில்லை என்றால் உங்கள் நாட்டில் வேலையின்மை ஏற்படும். பொருளாதாரம் சீர்குலைந்து போகுமே. அப்போது, அந்தச் சுவரை உடைக்க நீங்கள் கெஞ்சுவீர்கள். நாங்கள், அதை விரும்ப மாட்டோம். நீங்கள் தான் அந்தச் சுவரை விரும்பி எழுப்பியது. அந்தச் சுவருக்குள் நீங்களே வாழுங்கள்” என்று மெக்சிகோ தலைவர் கூறி உள்ளார். மெக்சிகோ நாட்டு பெண் அதிபர் ஒருவர் அமெரிக்க அதிபரை பற்றி இப்படி பகிரங்கமாக வறுத்தெடுத்து மிரட்டியது உலக அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top